

கோவை: கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை எம்.பி.யாக திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது எம்பி அலுவலகம் வஉசி மைதானத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து எம்.பி. கணபதி ராஜ்குமார் கூறும்போது, “தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களுக்கு அவர்கள் தொகுதிகளில் அரசு சார்பில் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. எம்.பி-க்களுக்கு என அலுவலகம் அரசு சார்பில் தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதல்முறையாக கோவையில் வாடகை கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் அளிக்கலாம். அவ்வப்போது நானும் நேரடியாக மனுக்களை பெறுவேன்” என்றார்.
இதுகுறித்து கோவை முன்னாள் எம்.பி நடராஜன் கூறும்போது, “கோவையில் எம்.பி-க்கு அலுவலகம் வேண்டும் என நான் பொறுப்பு வகித்த காலத்தில் கோரிக்கை விடுத்தேன். தற்போது மாநகராட்சி சார்பில் எம்.பி கணபதி ராஜ்குமாருக்கு அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நான் எம்பியாக இருந்தபோது எங்களது கட்சி அலுவலகத்தின் மாடியில் உள்ள அறையை பயன்படுத்தி வந்தேன்.
மதுரையில் எம்.பி சு.வெங்கடேசனுக்கும் மாநகராட்சி சார்பில் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது” என்றார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, “கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எம்.பியை நேரில் சந்தித்து மனுக்களை வழங்கவும், குறைகளை கேட்டறியவும் உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியுடன் கலந்தாலோசித்த பின் மாநகராட்சி சார்பில் அலுவலகம் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.