Published : 22 Jan 2025 03:44 PM
Last Updated : 22 Jan 2025 03:44 PM
கோவை: “திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட முயற்சிப்பதே திமுக கூட்டம் தான்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருக்குறளை பின்பற்றினால் தான் தமிழகமும், உலகமும் காப்பற்றப்படும். அதற்கு திருவள்ளுவரை யாரும் கபளீரம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழகத்தில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயற்சிக்கிறது.” என கூறியிருக்கிறார்.
திருவள்ளுவரும், திருஅருட்பிரகாச வள்ளலாரும் இந்து மதத்தில் பிறந்தவர்கள். இந்து ஆன்மிக ஞானத்தை மக்களுக்கு போதித்தவர்கள். எப்போதும் திருநீறு அணிந்து காணப்படும், திருஅருட்பிரகாச வள்ளலாரையே, திருநீறு இல்லாத படத்துடன் வெளியிட்டு, அவரின் அடையாளத்தை மறைப்பவர்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் அடையாளத்தை மறைப்பதில் வியப்பில்லை. திராவிடத்தின் பெயரால் தமிழ், தமிழரின் அடையாளத்தையே மறைப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காலகட்டம் இது. திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்று அதிகாரத்தையே வைத்தவர் திருவள்ளுவர்.
திருக்குறளில் இந்து ஆன்மிக ஞான கருத்துகள் பொதிந்துள்ளன. அதற்கு எண்ணற்ற உதாரணங்களை கொடுக்க முடியும். ஆனால், திருவள்ளுவரின் ஆன்மிக அடையாளத்தை அழித்து, திருக்குறளில் உள்ள ஆன்மிகத்தை அகற்ற, இந்து மத அழிப்பை லட்சியமாகக் கொண்டே திமுக காலங்காலமாக செய்து வருகிறது. திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட முயற்சிப்பதே திமுக கூட்டம்தான்.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அமைத்தவர், ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே. நினைவு மண்டபம் அமைக்கும் பணி முடிந்ததும், அதற்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானித்தவரும் அவர் தான்.
1979 ஏப்ரல் 15-ம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, முதல்வர் எம்ஜிஆர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை கொண்டு, திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டியவர் ஏக்நாத் ரானடே. நாங்கள் எப்போதும் திருவள்ளுவரை போற்றுகிறோம். திருவள்ளுவரை களவாட முயன்று, முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், திரும்ப திரும்ப மற்றவர்கள் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறது. திருக்குறளை உண்மையிலேயே படிப்பவர்கள், திருவள்ளுவர் தெய்வப்புலவர் என்பதை உணர்வார்கள், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT