

மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக பரவிய தகவலால் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். அந்த தகவல் வெறும் வதந்தி, அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு 4,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி விடுதியில் தங்கிப் படித்த வடமாநில மாணவி ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டதாகவும் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் தகவல் பரவி வந்தது. ‘அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இது வெறும் வதந்தி’ என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. மேலும், பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் சமூக விரோதிகள் சிலர் வதந்தி பரப்புவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், 3 நாள் விடு முறைக்குப் பிறகு திங்கள் கிழமை பள்ளி திறக்கப்பட்டது. வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து நுழைவாயில் கேட்டை பள்ளி ஊழியர்கள் பூட்டினர். ஆத்திரமடைந்த பெற்றோர், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் கேட்டை உடைத்துக் கொண்டு பள்ளிக்குள் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி பெற்றோர்களை எச்சரித்தனர். யாரும் கலைந்து செல்லாததால், போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டினர்.
வகுப்பறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது பிள்ளை களை வெளியே அனுப்ப வேண்டும் என பள்ளி நிர்வாகத்தி டமும் போலீஸ் அதிகாரிகளிடமும் பெற்றோர் வலியுறுத்தினர். பிற்பகல் 2 மணி அளவில் மாணவிகள் அனைவரும் வெளியே அனுப்பப்பட் டனர். பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. பெற்றோர்கள் போராட் டத்தால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, ‘‘மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட வில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால், வகுப்பறை மற்றும் கழிவறையில் இருந்த ரத்தத்தை சில மாணவிகள் பார்த்துள்ளனர். இந்தப் பள்ளியில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. இங்கு வேலை செய்ப வர்கள், மாணவியை பலாத்காரம் செய்திருக்கக் கூடும். போலீஸ் அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக இல்லாமல், நேர்மையாக விசாரித்து உண்மையை கண்டு பிடிக்க வேண்டும்’’ என்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறும் போது, “பள்ளியில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்கவில்லை. மாணவி யாரும் காணாமல் போகவில்லை. அனைத்து மாணவி களும் பாதுகாப்பாக உள்ளனர்” என்றனர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தியிடம் கேட்டபோது, ‘‘இது வெறும் வதந்தி என்று தெரிய வந்துள்ளது. எனவே, பெற்றோர் யாரும் அதை நம்ப வேண்டாம்’’ என கூறினார்.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறும் போது, “பல்லா வரம் பள்ளியில் மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப் படும் சம்பவம் வெறும் வதந்தி என விசாரணையில் தெரியவந்துள் ளது. எனவே, அதை யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்கள் பயப்பட வேண்டாம்” என்றார்.
இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வதந்தி பரப்பியது யார் என விசாரித்து வருகின்றனர்.