

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 41 பேர் புதன்கிழமை காலை தாயகம் திரும்பினர்.
ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கைது செய்தனர்.
செப். 18-ம் தேதி புத்தளம் நீதிமன்றம் 35 மீனவர்களுக்கு 06 மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இலங்கை நீதிமன்றங்களால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை தரப்பில் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இந்த பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேர் அபராதம் ரத்து செய்யப்பட்டு, தண்டனை காலம் நிறைவடையும் முன்னரே விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் கடந்த ஜனவரி 15-ம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்ட மண்டபம் விசைப்படகு மீனவர்கள் 6 பேர், இந்த பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேர் என மொத்தம் 41 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு செவ்வாய்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். அங்கிருந்து மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வாகனங்கள் மூலம் பாம்பன் மற்றும் மண்டபத்திற்கு புதன்கிழமை காலை அழைத்து வரப்பட்டனர்.