Published : 22 Jan 2025 06:20 AM
Last Updated : 22 Jan 2025 06:20 AM

செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் வந்தது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைப்பு

சென்னை: தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் வந்தது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொலை வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், இவர்களுக்கு உணவு கொடுக்கச் சென்ற கைதி பிரகாஷ் ஆகியோர் சிறையில் அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ‘‘பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறி, இருவரின் உடல்நிலை குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் வந்தது குறித்து விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி, ‘‘பிலால் மாலிக்கின் உடலில் கடுமையான காயங்கள் இருப்பதாகவும், பன்னா இஸ்மாயி்ல் மற்றும் பிரகாஷின் உடலில் லேசான காயங்கள் இருப்பதாகவும் அரசு மருத்துவமனை டீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், கைதிகள் மூவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வேலூர் சரக டிஐஜி-யின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன.30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x