Published : 22 Jan 2025 08:38 AM
Last Updated : 22 Jan 2025 08:38 AM
சென்னை: பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தேவைப்படுகிறது. அதேநேரம் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அம்மக்களை தவெக தலைவர் நடிகர் விஜய் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு உருவாகும்: இந்த நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரின் இரண்டா வது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் பாதிக் கப்படக் கூடாது என்ற அடிப்படையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக் கும் பொருளாதார மேம்பாடு களுக்கும் உறுதுணையாக அமையும் என்பதால் இத்திட் டத்தை செயல்படுத்த முனைந் துள்ளது.
இந்திய விமான ஆணையம் மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வு, டிட்கோவின் விரிவான பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்த பண்ணூரை விட பரந்தூர் தளம் மிகவும் பொருத்தமான உருவெடுத்துள்ளது. பரந்தூரில் உள்ள திட்டத் தளம், வரவிருக்கும் சென்னை- பெங்களூரு விரைவுச் சாலைக்கு அருகில் உள்ளது. இது மற்ற சாலை மற்றும் ரயில் இணைப்பைத் தவிர, தேவையான இடங்களுக்கு எளிதாகவும், குறைந்த செலவிலும் சென்று வரத்தக்க இடமாக அமைந் துள்ளது.
பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது, விமானச் செயல்பாடுகளுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் பரந்தூரில் குறைவாகவே உள்ளன. பண்ணூர் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் வளர்ச்சியடைந் துள்ளதால், அங்கு கூடுதல் நிலங்கள் கையகப்படுத்துவது கடினம். பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் செலவு குறையும். முந்தைய ஆட்சி யினரால் பரந்தூர் தேர்வு செய் யப்பட்டது.
பொருளாதார புரட்சி ஏற்படும்: டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் மிகச் சிறியதாகும். அடுத்த 10 ஆண்டுகளில் 8 கோடி பேர் பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்கா போல பரந்தூர் விமான நிலையமும் எதிர்காலப் பொருளாதாரப் புரட்சிக்கு அடித்தளமாக அமையும். திமுக அரசு எப்போதும் மக்களின் நலன்களை முன்வைத்தே திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களில் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் மக்களின் குறைகளை ஆராய்ந்து மக்கள் நலனை அரசு பாது காக்கும்.
பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளையும் சீர்செய்வது குறித்து அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும். விமான நிலையம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உறுதியாகத் தேவைப்படும் என்பதால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சி ஒருபுறம் என்றாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துடன் செயல்படுகிறார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT