Published : 22 Jan 2025 09:26 AM
Last Updated : 22 Jan 2025 09:26 AM
அதிமுக-வுடன் சேர்ந்து பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலேயே பாஜக வேட்பாளர் நிறுத்தப்படலாம் என பேச்சு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டது பாஜக.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பாமக-வை களமிறக்கிவிட்டு கப் சிப் ஆகிவிட்டது. ஆனால், இம்முறை ஈரோடு கிழக்கில் அண்ணாமலையே போட்டியிடலாம் என்ற செய்தி ஆரம்பத்திலேயே அடிபட்டது. களத்தில் அதிமுக இல்லை என்றதும், அண்ணாமலை இறங்கினால் ஆடிப் பார்த்துவிடலாம் என்ற பேச்சுக்கள் இன்னும் பலமாக ஒலித்தன.
பாஜக-வின் இந்த எண்ணவோட்டத்தை ‘ஸ்மெல்’ செய்த திமுக தரப்பு தடாலடி முடிவை எடுத்தது. காங்கிரஸ் போட்டியிட்டால் பாஜக கடும் போட்டியை உண்டாக்கும். இது திமுக ஆட்சிக்கு சங்கடத்தை உண்டாக்கும் எனக் கணக்குப்போட்டது திமுக. அதனால், நேரடியாக டெல்லிக்கே பேசி தொகுதியை தங்களுக்கு எடுத்துக் கொண்டது திமுக. இதை எதிர்பார்க்காத பாஜக, வேறு வழியில்லாமல் அதிமுக வழியில் ஜகா வாங்கியது.
பாஜக-வின் இந்த முடிவு அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி நாம்தான் என பாஜக-வினர் மனதில் ஆழமாக பதியவைத்துவிட்டார் அண்ணாமலை. அப்படி இருக்கையில், அதிமுக புறக்கணித்த இடைத்தேர்தல் களத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதுதானே சரியாக இருந்திருக்கும் என்பது பாஜக-வினரின் ஆதங்கம். பாஜக-வுக்கு செல்வாக்கான கொங்கு மண்டலத்தில் நடக்கும் இடைத்தேர்தலை அந்தக் கட்சி பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டது ஏன் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்களும் எழுப்புகின்றனர்.
ஈரோடு கிழக்கில் களமிறங்கி இருந்தால் சுமார் ஒரு மாத காலத்துக்கு கட்சி ‘லைம் லைட்’டில் இருந்திருக்கும். ஓரளவு கணிசமான வாக்குகளை வாங்கியிருந்தாலே மக்களின் கவனத்தையும் பெற்றிருக்கலாம். இன்னும் ஓராண்டில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், இது கட்சிக்கும் பெரும் ஊக்கமாக இருந்திருக்கும் என்ற விவாதங்களும் பாஜக-வுக்குள் நடக்கின்றன.
இந்த நிலையில், திமுக-வுக்கு பயந்து இடைத்தேர்தலை புறக்கணித்ததா பாஜக என்ற கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “அப்படியானால் காங்கிரஸ் எங்களுக்கு பயந்து போட்டியிடவில்லையா என கேட்க வேண்டும். கடந்த முறை கூட்டணி சார்பாக அதிமுக-வை நிறுத்த முடிவு செய்தோம். விக்கிரவாண்டியில் ஏற்கெனவே பாமக போட்டியிட்டதால் அக்கட்சியே போட்டியிட்டது. கடந்த இடைத்தேர்தலில் சர்வாதிகார திமுக அரசு பெரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தது.
மக்களை ஆடுகளை அடைப்பதை போல பட்டியில் அடைத்துவைத்து, அடிமைகளை போல நடத்திய கொடுமைகளை பார்த்தோம். வார்டுக்கு ஒரு அமைச்சரையும், தெருவுக்கு ஒரு எம்எல்ஏ-வையும் போட்டு பணத்தை வாரியிறைத்தனர். இந்தமுறை அதைவிட மோசமாக செய்வார்கள்.
எனவே இந்தக் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துரைக்கவே புறக்கணித்தோம். நாங்கள் ஏன் இத்தேர்தலை புறக்கணித்தோம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மற்றபடி யாரைப் பார்த்தும் எங்களுக்கு பயமில்லை” என்றார். “2026-ல் திமுக-வை வீழ்த்துவோம்; தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைப்போம்” எனச் சொல்லி வரும் பாஜக, இடைத்தேர்தலை புறக்கணிக்க நிஜமான காரணம் என்னவென்பது அந்த அண்ணாமலைக்கே வெளிச்சம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT