உதவித்தொகையை உயர்த்த கோரி மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்: சென்னையில் 662 பேர் கைது

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கருணை தொகையை உயர்த்தி வழங்க கோரி, தாம்பரம் தாலுகா  அலுவலகம் முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடந்தது. | படம்: எம்.முத்துகணேஷ் |
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கருணை தொகையை உயர்த்தி வழங்க கோரி, தாம்பரம் தாலுகா அலுவலகம் முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடந்தது. | படம்: எம்.முத்துகணேஷ் |
Updated on
2 min read

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 26 மையங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு, அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் வில்சன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 87 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, மாநிலத் தலைவர் வில்சன் கூறியதாவது: சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு (74 சதவீதம் ஊனம்) ரூ.6,000, கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு (75 சதவீதத்துக்கு மேல்) ரூ.10,000, கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு (வீட்டில் முடங்கி இருப்பவர்கள்) ரூ.15,000 என ஆந்திர அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு, சாதாரண மற்றும் கடும் ஊனமுற்றோர் ஆகிய இரண்டு பிரிவுகளில் முறையே ரூ.1,500, ரூ.2,000 மட்டுமே உதவித்தொகை வழங்குகிறது.

எனவே, ஆந்திர மாநில அரசு வழங்குவதுபோல, உதவித்தொகையை உயர்த்த வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் ஆந்திரா 8-வது இடத்தில் உள்ளது. தமிழக அரசு 2-வது இடத்தில் இருக்கிறது. எனவே, உள்நாட்டு உற்பத்தியில் முன்னிலையில் உள்ள தமிழக அரசு உடனடியாக மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 182 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரம்பூரில் மாநில செயற்குழு தலைவர் ராணி தலைமையிலும், தாம்பரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையிலும், சேத்துப்பட்டில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மனோன்மணி தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் துணை தலைவர் நம்புராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் மாநில தலைவர் வில்சன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in