Published : 22 Jan 2025 06:21 AM
Last Updated : 22 Jan 2025 06:21 AM

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுப்பு: வெறும் கண்களால் பார்க்கலாம்

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று (ஜன. 22) முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றையொன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படும். அதன்படி, 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வு தற்போது நடைபெற உள்ளது.

வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படுகின்றன. வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களையும், நெப்டியூன், யுரேனஸை சக்திவாய்ந்த தொலைநோக்கிகளாலும் காணமுடியும். இவற்றைக் காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் இன்று முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா மையத்தில் வரும் 25-ம் தேதி வரை தினமும் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை தொலைநோக்கி மூலமாக பொதுமக்கள் இவற்றைக் காணலாம். இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, ‘‘கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தை தருகின்றன. வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் கிரகங்களை வீட்டின் மாடி, மைதானங்கள் அல்லது கடற்கரையில் இருந்து பார்க்கலாம். செவ்வாய் கிரகம் இரவு 9 மணியளவில்தான் உதயமாகும். யுரேனஸ், நெப்டியூனை சக்திவாய்ந்த தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க இயலும். இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் பிப். 28, ஆக. 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x