Published : 22 Jan 2025 01:52 AM
Last Updated : 22 Jan 2025 01:52 AM
டெல்டா மாவட்டங்களில் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், மத்திய குழுவினர் ஆய்வுக்காக தமிழகம் வரவுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கிய நிலையில், தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. மேக மூட்டம், மழைப்பொழிவும் உள்ளதால், விவசாயிகள் நெல்லை உலர வைப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில், உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்ய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய உணவுத்துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விரைவில் தமிழகம் வந்து தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுக்கழக அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை தொடங்க உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT