வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே முயல்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே முயல்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
2 min read

காரைக்குடி: ​மாநிலப் பட்டியலுக்​குக் கல்வியை கொண்டு​வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்று முதல்வர் ஸ்​டா​லின் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்​குடி அழகப்பா பல்கலை. வளாகத்​தில் முன்​னாள் மத்திய நிதி​யமைச்சர் ப.சிதம்​பரம், தனது சொந்த நிதி ரூ.12 கோடி​யில் கட்டிய லட்சுமி வளர்​தமிழ் நூலகத்தை முதல்வர் ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார். தொடர்ந்து, நிர்​வாகக் கட்டிடத்​தில் அமைக்​கப்​பட்ட திரு​வள்​ளுவர் சிலை​யை​யும் முதல்வர் திறந்​து​வைத்​தார்.

பின்னர், பல்கலை. பட்டமளிப்பு விழா கலையரங்​கில் நடைபெற்ற விழாவுக்கு மு.க.ஸ்​டா​லின் தலைமை வகித்​தார். ப.சிதம்​பரம், கவிஞர் வைரமுத்து முன்னிலை வகித்​தனர். துணைவேந்தர் ரவி வரவேற்​றார். விழா​வில், கருத்​தரங்கு கூடத்துக்கு ‘வீறுக​வியரசர் முடியரசனார் அரங்கு’ என்று முதல்வர் பெயர் சூட்​டி​னார். தொடர்ந்து, கருணாநிதி நூற்​றாண்டு விழா தேசியக் கருத்​தரங்கு ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு நூலை முதல்வர் வெளியிட, துணைவேந்தர் பெற்றுக் கொண்​டார். பின்னர், முதல்வர் பேசி​ய​தாவது: வள்ளுவர் நெறிகளே, நமது வாழ்​வியல் நெறிகளாக மாறும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். திருக்​குறளைப் பின்​பற்றி
னால்​தான் தமிழக​மும், உலகமும் காப்​பாற்​றப்​படும். அதேநேரத்தில், வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்​யாமல் பார்த்​துக்​கொள்ள வேண்​டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற சமத்து​வத்​தைப் பேசிய மாமனிதர்களை களவாட ஒரு கூட்டமே முயல்​கிறது. அதற்கு எதிரான காவலர்​களாக ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்​டும்.

‘அறிவு​தான் நம்மைக் காக்​கும் கருவி’ என்று வள்ளுவர் சொன்னதற்கு அடையாள​மாக, ப.சிதம்பரம் தனது தாயார் பெயரில் நூலகத்​தைக் கட்டி​யுள்​ளார். அதற்காக அவருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சி​யில் கல்விக்கு முக்​கி​யத்துவம் கொடுத்​து திட்​டங்​களைச் செயல்​படுத்தி வருகிறோம். நாட்​டில் அதிக அரசு பல்கலைக்​கழகங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்​கிறது. உயர்​கல்வி மாணவர்கள் சேர்க்கை​யில், தேசிய சராசரியைவிட 2 மடங்காக உயர்ந்​துள்ளது. உயர்​கல்​வி​யில் சிறந்து விளங்க, பல்கலைக்கழக நிர்வாகம் மாநில அரசின் முழுக் கட்டுப்​பாட்​டில் இருக்க வேண்​டும். வேந்தர் பதவி​யில் மக்களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட முதல்வர் இருக்க வேண்​டும்.

உயர்​கல்வி மாணவர்​களுக்​குத் திட்​டங்கள் வகுத்து, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்​களுக்கு ஊதியம், கட்டமைப்பு வசதி​களைச் செய்வது மாநில அரசு. ஆனால், வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசால் நியமிக்​கப்​பட்ட ஒருவருக்கா என்பது​தான் எனது கேள்வி. அதனால்​தான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். மாநிலப் பட்டியலுக்​குக் கல்வியை கொண்டு​வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

​முன்ன​தாக, க​விஞர் அண்ணா​தாசன் எழு​திய ‘மாண்​புமிகு தமிழ்​நாடு ​முதல்​வர் ​மு.க.ஸ்​டா​லின் பிள்​ளைத் தமிழ்’ என்ற நூலை ப.சிதம்​பரம் வெளி​யிட, பல்​கலை. துணைவேந்​தர் பெற்​றுக்​கொண்​டார்​.

மேடையில் அழுத ப.சிதம்பரம்: விழாவில் பேசிய ப.சிதம்பரம் தனது தாயாரை நினைவுகூர்ந்து பேசினார். அப்போது அவர் அழுதார். தொடர்ந்து தழுதழுத்த குரலில் பேசிய அவர், ‘‘தமிழ் இலக்கியம், இயல், இசை, நாடகத்தை தாண்டி, கணிதம், கணினி, அறிவியல், சட்டம், மருத்துவம், வேளாண்மை, மேலாண்மை, டிஜிட்டல், ரோபோட்டிக்ஸ் தமிழ் என புதிய வடிவங்களை எடுக்கவேண்டும். இந்த நூலகம் உலகம் போற்றும் ஆராய்ச்சி மையமாக வும், புதிய படைப்பாளிகளின் நாற்றுப் பண்ணையாகவும் அமைய வேண்டும். மிகப் பெரிய இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க, சேகரிக்க தமிழன்பர்கள் உதவ வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in