ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி திமுக சாதனை படைக்கும்: இபிஎஸ் விமர்சனம்

ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி திமுக சாதனை படைக்கும்: இபிஎஸ் விமர்சனம்

Published on

சேலம்: திமுக ஆட்சி முடிவதற்​குள் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்து விடு​வார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நிதி மேலாண்​மை​யில் எனக்கு புரிதல் இல்லை என்று தமிழக நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு விமர்​சித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சி​யில் ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் வாங்கி, இந்தியா​விலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் என்ற சாதனையைப் புரிந்​துள்ளனர்.

அதிமுக ஆட்சி​யில் பெட்​ரோல், மதுபானம் மூலம் ரூ.43,489 கோடி வருவாய் வந்த நிலை​யில், திமுக ஆட்சி​யில் ரூ.69,588 கோடியாக அதிகரித்​துள்ளது. அதே போல, ஜிஎஸ்டி மூலம் ரூ.73,788 கோடி, முத்​திரைத்​தாள் விற்​பனை​யில் ரூ.23,370 கோடி​யும், கலால் வரியில் ரூ.12,247 கோடி, வாகன வரியில் ரூ.11,560 கோடி என திமுக ஆட்சி​யில் அதிக வருவாய் கிடைத்​துள்ளது. அதாவது ரூ.86,064 கோடி வருவாய் அதிகம் கிடைத்​திருக்​கிறது.

மத்திய அரசின் வரிப்​பகிர்​வில் அதிமுக ஆட்சி​யில் ரூ.24,925 கோடி கிடைத்த நிலை​யில், திமுக ஆட்சி​யில் ரூ.49,755 கோடி கிடைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு​களில் அதிமுக ஆட்சி​யை விட ரூ.1 லட்சத்து 10,894 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஆனாலும், ரூ.3,53,392 கோடி கடன் வாங்​கப்​பட்​டுள்​ளது.

திமுக ஆட்சி முடிவதற்​குள் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்து விடு​வார்​கள். இவ்வளவு வருவாய் இருந்​தும், திமுக எதையும் செய்ய​வில்லை. கட்ட​ணங்கள் உயர்த்​தப்​பட்டாலும் கடன் குறைய​வில்லை.

ராமநாத​புரம் மாவட்​டத்​தில் கனமழை​யால் 2 லட்சம் ஏக்கர் நெற்​ப​யிர்கள் பாதிக்​கப்​பட்​டுள்ளன. ஏக்கருக்கு குறைந்​த​பட்சம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்​டும். திருச்​செந்​தூர் பக்தர்களை அமைச்சர் விமர்​சித்துப் பேசியது கண்டனத்​துக்​குரியது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்​றப்​பட்​டால், கூட்​ட​ணிக்கு வாய்ப்பு உள்ளதா என்று கேட்​கிறீர்​கள். நாங்கள் கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறி​விட்​டோம். எனவே, கூட்டணி குறித்து கேட்கத் தேவையில்லை. தேர்தல் நேரத்​தில்​தான் கூட்டணி முடிவாகும். ஈரோடு இடைத்​தேர்​தலில் அ​திமுக வாக்​கு​கள் ​யாருக்​குச் செல்​லும் என்பது ரகசி​ய​மானது, இது​குறித்து ​யாரும் பகிரங்​கமாக கருத்து கூறக்​கூடாது. இவ்​வாறு பழனிசாமி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in