

திருமயம் அருகே கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்ட கல் குவாரியில் கனிம வளத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அந்தக் குவாரி சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (56). சமூக ஆர்வலரான இவர், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார். துளையானூரில் உள்ள கல்குவாரியில், விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களுக்கு ஜகபர் அலி தொடர்ந்து புகார் அளித்து வந்தார். நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த 13-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.
இதையறிந்த கல் குவாரி உரிமையாளர்களான துளையானூர் ராசு, ராமையா, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் திருமயத்தைச் சேர்ந்த முருகானந்தம், ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைத் சேர்ந்த காசிநாதன் ஆகியோர் சதித் திட்டம் தீட்டி, கடந்த 17-ம் தேதி காட்டுப்பாவா பள்ளிவாசல் சாலையில் சென்றுகொண்டிருந்த ஜகபர் அலி மீது லாரியை ஏற்றி கொலை செய்தனர். இந்த வழக்கில் ராமையாவைத் தவிர மற்ற 4 பேரையும் திருமயம் போலீஸார் கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், துளையானூரில் உள்ள இவர்களது கல் குவாரியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர்கள் திருச்சி ஜெயசீலா, புதுக்கோட்டை லலிதா, நாகை சுரதா ஆகியோர், வருவாய், நில அளவை மற்றும் காவல் துறையினருடன் சேர்ந்து நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, இந்தக கல்குவாரிக்கான அனுமதி 2023-ம் ஆண்டுடன் முடிவடைந்துள்ளதும், அதன்பிறகும் சட்டவிரோதமாக செயல்பட்டதுடன், அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அங்கு, அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலத்தில், கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, கோட்டாட்சியர் அலுவலகத்திலும் பலமுறை ஜகபர் அலி மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, காவிரி-குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.