

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி களை முடக்க நினைக்கின்றனர் என்று தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது தங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தரக் குறைவாக பேசுவதாகக் கூறி, தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே நிருபர்களிடம் தேமுதிக கொறடா சந்திரகுமார் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அந்தத் துறைக்கு சம்பந்தம் இல்லாத சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி எழுந்து, எங்கள் தலைவர் விஜயகாந்தை துரோகி என்றும் துரோகம் செய்தவர் என்றும் கூறினார். இதுகுறித்து பதிலளிக்க எங்கள் கட்சி உறுப்பினர்கள் முயன்றபோது, பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை.
அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தனது பதிலுரையின்போது, பெயரை குறிப்பிடாமல் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு எங்கள் கட்சியையும் எங்கள் தலைவர் விஜயகாந்தையும் மிகவும் தரக்குறைவான வார்த்தை களை பயன்படுத்தி பேசினார். இந்த அவையின் மூத்த உறுப்பினரான அவர், தனது வயதை மறந்து தரக்குறைவான வார்த்தைகளை பேசினார். பேரவையில் மக்கள் பிரச்சி னையை பேச அனுமதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளை அவமானப் படுத்தி, முடக்க வேண்டும் என்றுதான் நினைக் கின்றனர் என்றார் சந்திரகுமார்.