Published : 21 Jan 2025 04:06 PM
Last Updated : 21 Jan 2025 04:06 PM

‘திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் திமுக சதி செய்கிறது’ - இந்து முன்னணி குற்றச்சாட்டு

சென்னை: “திருப்பரங்குன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அப்துல் சமது ஆய்வு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்ட ஆளும் திமுக சதி செய்கிறது” என்று இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணப்பாறை தொகுதி திமுக எம்எல்ஏ அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்களுடன் திருப்பரங்குன்றத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இது அப்துல் சமதுவின் தொகுதி இல்லை. அவர் அமைச்சரும் இல்லை. அதுமட்டுமல்லாது பயங்கரவாத அமைப்பினரை உடன் அழைத்து வந்துள்ளார். இது திட்டமிட்ட சதி என்பது அப்பட்டமாக தெரிந்தும் காவல்துறை அதிகாரிகள் அவர்களை அனுமதித்துள்ளனர்.

சமீபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முஸ்லிம் சமாதியை வைத்து திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக கையகப்படுத்திட வேண்டும் என்றும், இதன்மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்றும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் மனநிலை, சதிச் செயலை வெளிப்படுத்துகிறது.

திருப்பரங்குன்றம் மலை முருகனின் மலை என்பதற்கு தமிழ் இலக்கியங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மேலும் தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்து இன்றைய ஆட்சியாளர்கள் வரை நிர்வாக ரீதியான ஆவணங்களும் இது முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான ஆவணங்களும் பல உள்ளன. மேலும் லண்டன் நீதிமன்றம் முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை அது முருகனின் மலை என்று உறுதி கூறியுள்ளன. மேலும் அம்மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இத்தகைய சமாதி கட்டும் சதிச் செயல்கள், கோயில்களை ஆக்கிரமிக்க முகலாயர் காலத்தில் இருந்தே செய்யப்பட்ட உத்தி என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. உதாரணமாக எட்டுக்குடி முருகன் கோயில் தான் ஏர்வாடி தர்காவாக மாற்றப்பட்டது என்பது வரலாறு. அதுபோல கர்நாடகாவில் உள்ள ஶ்ரீ ரங்கபட்டினம் ரங்கநாதர் கோயிலின் உள்ளேயே முஸ்லிம் சடலம் புதைக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இஸ்லாம் மதத்தின் படி சமாதி கட்டுவது, தர்கா வழிபாடு தடை செய்யப்பட்டது. அது இஸ்லாமிய மத விரோதம் ஆகும். அப்படி இருக்கையில் இது மதக்கலவரத்தை தூண்டுகிற செயல் தானே.

புனிதமான மலை மீது முஸ்லிம்கள் சட்டவிரோதமாக உள்ள முஸ்லிம் சமாதியில் வழிபட சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அப்துல் சமது மனு அளித்தார். அப்போதே முதல்வர் தலையிட்டு கண்டித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் ஒவ்வொரு அமைப்பும் போட்டி போட்டு கொண்டு இதனை பிரச்சினையாக்க முயல்கின்றன என்பது வெளிப்படையாக தெரிந்தும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.

தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் செயலுக்கு தமிழக ஆளும் கட்சி துணைபோகிறது. முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதற்கு உரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தவில்லை. அதுபோல மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் பகுதியின் மேம்பாட்டிற்கு உரிய நிதியை அளித்து மேம்படுத்த வேண்டும்.

எனவே, இத்தகைய போக்கு ஒட்டுமொத்த முருக பக்தர்களை அவமதிக்கும் செயல். ஒருபுறம் உலக முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்திய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு உடனடியாக இந்த சதி செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் இதனை திமுக தொடர நினைத்தால் உலகம் முழுவதிலும் இருக்கும் முருக பக்தர்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x