Published : 21 Jan 2025 06:10 AM
Last Updated : 21 Jan 2025 06:10 AM

சென்னை கடற்கரையில் ஆமைகள் இறப்புக்கு என்ன காரணம்? - தமிழக அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான காரணங்கள் மற்றும் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் திருவொற்றியூர் முதல் நீலாங்கரை வரையும், அங்கிருந்து கோவளம் வரையும் கடந்த வாரம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. 500-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆமைகள் கடல் வளத்தையும், மீன் வளத்தையும் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், முதலாவது பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் திடீர் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் இறப்புக்கான உண்மையான காரணத்தை வனத் துறையும், மீன்வளத் துறையும், காவல் துறையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஆமைகள் இறப்பு தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மீனவர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் விசைப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது. தடை விதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துகின்றனர். கடல் ஆமைகளை பாதுகாக்கும் டெட் (TED-Turtle Excluder Device) வசதி கொண்ட வலைகளை பயன்படுத்துவதில்லை.

இதனால் ஆமைகள் வலைகளில் சிக்கி இறக்கின்றன என்று செய்தித்தாள்களில் வந்துள்ளன. அரசுத் துறைகள் ஆமைகள் இறப்புக்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. உண்மையில் ஆமைகள் அதிக அளவில் இறந்ததற்கு என்ன காரணம்? ஆமைகள் இறப்புக்கு யார் பொறுப்பு? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை (ஜன.22) தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x