மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் சுகாதார திட்ட செயல்பாடுகளை நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் நிதி ஆதாரத்தில் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழுவினர் கேட்டறிந்தனர். சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற குழு தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்கோபால் யாதவ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், மாநிலங்களின் சுகாதார திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த குழு உறுப்பினர்கள் சென்னையில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர். தமிழக சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு, தேசிய நலவாழ்வு குழும திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் நிதி ஆதாரத்தின்கீழ் செயல்படுத்தப்படும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டம், போலியோ ஒழிப்பு நடவடிக்கைகள், கொசுக்கள் - பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள் ஒழிப்பு திட்டம், குழந்தைகள் - கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம், இ-சஞ்சீவனி தொலைநிலை மருத்துவம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள், அதற்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் பயன்பாடுகள் குறித்து இக்குழுவினர் கேட்டறிந்தனர்.

தமிழகத்தில் தேசிய நலவாழ்வு குழும திட்ட செயலாக்கம் குறித்து நாடாளுமன்ற குழுவினரிடம் மாநில அரசு அதிகாரிகள் விளக்கமாக தெரிவித்தனர். குழுவினர் இதை அறிக்கையாக தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in