Published : 21 Jan 2025 06:04 AM
Last Updated : 21 Jan 2025 06:04 AM

மெரினாவில் பிரமாண்டமாக நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், போலீஸார் உள்ளிட்டோர் அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனர்.

சென்னை: குடியரசு தின விழாவுக்கான முதற்கட்ட அணிவகுப்பு ஒத்திகை மெரினா காமராஜர் சாலையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்ற உள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்: அந்த நிகழ்ச்சியில் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணி வகுப்புகள் நடைபெறும். இதற்கான அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்படும். அதன்படி, ஜனவரி 20, 22, 24 ஆகிய 3 தினங்கள் மெரினா காமராஜர் சாலையில் ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்றது.

அணிவகுப்பில் பங்கேற்ற குதிரைப் படை வீரர்கள்.

ஆளுநர் மற்றும் முதல்வர் வருவது போல் ஒத்திகைகள் மற்றும் முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.

ஆண்டு தோறும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால், தற்போது அந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று இடமாக உழைப்பாளர் சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெற உள்ளது. அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு, ஒத்திகை நிறைவடையும் வரை நேற்று காலை காமராஜர் சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x