Published : 21 Jan 2025 04:17 AM
Last Updated : 21 Jan 2025 04:17 AM
பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது அவை நிகழ்ச்சி குறிப்பில் நீக்கப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்தார்.
இந்திய அளவிலான பேரவைத் தலைவர்கள் மாநாடு பிஹார் சட்டப்பேரவை அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் தலைமை தாங்கினார். இதில், பேரவை தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். இதில் அப்பாவு பேசியதாவது:
நாடாளுமன்ற மசோதாக்கள் இந்தியில் இருப்பது அரசமைப்பின் பிரிவு 348-ஐ மீறுவதாகும். மாநில சுயாட்சி கேள்விக்குறியாகிவிட்டது. கூட்டாட்சி தத்துவமும் நீர்த்துப் போய்விட்டது. மத்திய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அதிகாரம் மற்றும் நிதிப்பங்கீட்டில் பாகுபாடு காட்டுவது மாநில அரசுகளுக்கு பெரும் தடையாக உள்ளது.
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் கவலை அளிக்கிறது. அவர் அரசியலமைப்புச் சட்டவிதிகளை கேலிக்கூத்து ஆக்கி வருகிறார். தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் தொடர்ந்து அவமதிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்களால் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. ஆரோக்கியமான ஜனநாயகம் செழிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தை பொருத்தமான முறையில் திருத்துவதற்கான எனது கருத்துகளை இந்த மாநாடு அங்கீகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்படுவதற்குப் பதில் ஆளுநர்கள் தங்களது அரசமைப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை. இந்த காரணத்துக்காக ஆளுநரின் பங்கு குறித்த பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் அரசமைப்பு மீறல்களால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தனது சமூகநலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. இவ்வாறு பேசினார்.
அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஆளுநர் குறித்து இங்கு பேசக்கூடாது எனவும் அவை நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என்றும் தெரிவித்தார். அப்போது அப்பாவு "தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து இந்த அமைப்பில் பேச முடியாவில்லை என்றால், வேறு எங்கு பேசுவது" கேள்வி எழுப்பினார். இருப்பினும் இதனை ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஏற்கவில்லை. இதையடுத்து அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT