

பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், மழை நீர் வடிவதற்கு வாய்ப்பில்லை என்பதாலும் அந்த நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட கடன்களை சம்பா பருவ சாகுபடியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அடைத்து விடலாம் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், காலம் தவறி பெய்த மழை அவர்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: காவிரி டெல்டா மாவட்டங்களில், பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போயுள்ளன. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு, மழையால் பாதிப்படைந்த பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு கணக்கிடுவதுடன், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், பிற பயிர்களுக்கு அதன் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அண்மையில் பெய்த மழையினாலும், பலத்த காற்றினாலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த விளைந்த பயிர்கள் காற்றில் சாய்ந்து, சரிந்து, தரையில் விழுந்து கிடக்கின்றன. தொடர் மழையால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில் அறுவடை செய்ய முடியாதபடி நெருக்கடியில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டு கணக்கெடுத்து, பாதிப்புக்கு தக்கபடி இழப்பீடு வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக தளர்த்தி, மாநில அரசு முன்அனுமதி வழங்கி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.குணசேகரன்: கடந்த சில நாட்களாக பொழிந்த தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் விட்டு விட்டு மீண்டும் தொடர்ந்த மழை மற்றும் காற்றால் சம்பா; தாளடி நெற்கதிர்கள் வெளிவந்த நிலையில் பல பகுதிகளில் சாய்ந்துவிட்டது. டெல்டாவின் தென் பகுதியில் பெருமளவு இந்த பாதிப்பு உள்ளது .எனவே, தமிழக அரசு உடனடியாக வட்டார அளவிலான குழுக்கள் அமைத்து, பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாம நடராஜன், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.