Published : 03 Jul 2018 07:37 AM
Last Updated : 03 Jul 2018 07:37 AM

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை சேமிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் வரை மின் உற்பத்தியை நிறுத்த கோரிய மனு தள்ளுபடி: 2022-ம் ஆண்டு வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை அமைக்கும் வரை மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கட்டமைப்பை உருவாக்க இந்திய அணுசக்தி கழகத்துக்கு 2022-ம் ஆண்டு வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாவது அணு உலை யில் கடந்த ஜூன் 19-ம் தேதி வரை 20,156 மில்லியன் யூனிட், 2-வது அணுஉலையில் இதுவரை 6,610 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக கடந்த பிப்ரவரி 19-ம் தேதி 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணியை தொடர்ந்து யுரேனியம் எரிகோல்கள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. மின்உற்பத்திக்கு முன்னதாக கிரிட்டிகாலிட்டி எனப்படும் அணுப்பிளவு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த இரு அணுமின் நிலையங்களில் இருந்தும் வெளியாகும் கழிவுகளை அணு உலைகளின் உள்ளே இருக்கும் சேம்பர்களில் தற்போது பாதுகாப்பாக சேமித்து வைக்கிறார்கள். இந்த கழிவுகளை அணுஉலைகளுக்கு வெளியே பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அணுசக்தி கழகத்துக்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளித்து, கடந்த 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அத்தகைய கட்டமைப்புகளை அணுசக்தி கழகம் இதுவரை அமைக்கவில்லை.

இந்த கட்டமைப்புகளை உருவாக்க மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் கேட்டு அணுசக்தி கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம், `இந்த கட்டமைப்புகளை உருவாக்கும் வரை யில் அணுமின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

3 நீதிபதிகள் அமர்வு விசாரணை

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, அணுஉலைகளில் கழிவுகளை சேமித்து வைக்கும் நிலையில் அதிக அளவில் வெப்பம் வெளியாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. இச்சூழ்நிலையில் விபத்து ஏதும் நேரிட்டால் என்ன ஆகும்?

புக்குஷிமாவில் அணுக்கழிவுகளை குளங்களில் சேமித்து வைத்திருந்தனர். அது நீராதாரங்களில் கசிந்து பல ஆண்டுகளுக்கு மீட்க முடியாதவாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியிருக்கிறது. அணுஉலைகளை தொடர்ந்து மின் உற்பத்தியில் ஈடுபடுத்தினால் மேலும் அதிகளவில் அணுமின் கழிவுகள் உருவாகும். எனவே, கட்டமைப்புகளை உருவாக்கும் வரை அணுஉலைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிட்டார்.

ஆனால், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், வரும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க, இந்திய அணுசக்தி கழகத்துக்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த காலவரையறை மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x