“கோமியத்தின் பண்புகளும், சான்றுகளும்...” - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி புதிய விளக்கம்

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி | கோப்புப் படம்
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: “கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார்.

மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, ‘‘என் தந்தை ஜுரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். கோமூத்திரம் (கோமியம்) குடிக்கச் சொன்னார். என் தந்தை குடித்ததும் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது” என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்வினையாற்றியுள்ளனர். குறிப்பாக, அவரது இந்தக் கருத்து அறிவியலுக்குப் புறம்பானது என்றும், மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே இவை உதவும் என்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய விளக்கம்: இந்நிலையில், கோமியம் குறித்த தனது கருத்துக்கு காமகோடி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சிறந்த பத்திரிகைகள் அறிவியல் சான்றுகளை வெளியிட்டுள்ளன. விவசாயத்திலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் இயற்கை வேளாண்மை மற்றும் உள்நாட்டு கால்நடை இனங்களின் பாதுகாப்பை ஆதரிக்கும் சூழலில் எனது கருத்துகள் கூறப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பசு பாதுகாப்பு தொடர்பாக காமகோடி பேசிய உரையின் சுருக்கம்: “காஞ்சி பெரியவருக்கு (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்) வேத சம்ரக்‌ஷணம், கோ (பசு) சம்ரக்‌ஷணம் ஆகியவையே இரண்டு கண்களாக இருந்ததாக எனது தந்தை கூறி இருக்கிறார். அதன்படியே (காஞ்சிபுரம் அருகே உள்ள) ஓரிக்கையில் வேத பாடசாலையும் அமைத்தோம். கோசாலையும் அமைத்தோம். மாடு வைக்கோல், புல் போன்ற எளிய உணவுகளை உண்டு, பால், தயிர், நெய் என மிக உயர்ந்த பொருட்களை நமக்கு தருகிறது. இதுபோன்ற ஒரு பலன், மனிதர்களுக்கு எந்த நிதி நிறுவன திட்டத்திலும்கூட கிடைக்காது. கோமியம், சாணம் ஆகியவை மிகப் பெரிய இயற்கை உரம். இது பூச்சிக்கொல்லி அல்ல; பூச்சி விரட்டி.

மாட்டு சாணத்தில் இருந்து விபூதி, கொசுவிரட்டி போன்ற பல உப பொருட்கள் கிடைக்கின்றன. பசு பாதுகாப்பு மூலம் மனிதர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. பல அறிவியல் ஆராய்ச்சிகள் இதனை நிரூபித்துள்ளன. எனவே, பசு பாதுகாப்பு மத ரீதியிலானது மட்டுமல்ல. எனது நெருங்கிய உறவினர்கள் இருவர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்து போனார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு எந்த தீய பழக்கமும் கிடையாது. இருந்தும் அவர்களுக்கு புற்றுநோய் வந்ததற்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் சாப்பிட்ட உணவு. உணவில் விஷம் இருக்கிறது. அதற்குக் காரணம், பூச்சிக்கொல்லி மருந்துகளில் விஷம் இருக்கிறது. எனவே, விஷமில்லாத உணவு மக்களுக்குக் கிடைக்க வேண்டுமானால் இயற்கை விவசாயம் மிகவும் முக்கியம். நானும் ஒரு இயற்கை விவசாயி. எனவே, இதுபற்றி பேச தகுதி இருக்கிறது.

நாம் எதற்கு பொருளீட்டுகிறோம். இந்த அரைசாண் வயிற்றுக்காகத்தான். அதற்கு நல்ல உணவு தேவை. நல்ல உணவுக்கு இயற்கை விவசாயம் தேவை. இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை பசு மாடு. பசு சாணம், பசு கோமியம் இல்லாவிட்டால் இயற்கை விவசாயம் இல்லை. அதேபோல், நாட்டு மாடு மிகவும் முக்கியம். நாட்டு மாடுகளுக்கு என்று தனிச் சிறப்புகள் உள்ளன. எனவே, நாட்டு மாடுகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தின் மீது மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட அனைவரும் பாடுபட வேண்டும்” என்றும் அந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசினார். | வாசிக்க > ‘கோமியம் குடித்ததால் காய்ச்சல் குணமானது’ - சென்னை ஐஐடி இயக்குநர் கருத்தும் தாக்கமும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in