Published : 20 Jan 2025 05:57 PM
Last Updated : 20 Jan 2025 05:57 PM

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 47 பேர் போட்டி!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எட்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்ற நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில், 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 55 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலை இருந்தது.

இந்நிலையில், வேட்புமனு திரும்ப பெறும் காலம் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளர் என மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். நோட்டாவுடன் சேர்த்து மொத்தம் 48 பேர் களத்தில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தலைமையில் சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஏற்கெனவே உதயசூரியன் சின்னம் இருப்பதால் அதையே ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார். தொடர்ந்து அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, கரும்பு விவசாயி சின்னமும், மைக் சின்னமும் முறையே ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தனர்.

இதில் கரும்பு விவசாயி சின்னம் வேறொரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மைக் சின்னம் ஒதுக்குவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை தேர்தல் அலுவலர் காட்டிய நிலையில், மைக் சின்னத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மற்ற வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறும்போது, “நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் வேறொரு மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படவில்லை. கட்சிக்கு அங்கீகாரம் பெற்று கொடுத்த மைக் சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன். நான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்பு உள்ளதால், நாம் தமிழர் வெல்லுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x