75 ஆண்டாக சேதம் அடையாத சாந்து சாலை! - இது காரைக்குடி ஆச்சரியம்

காரைக்குடி இடையர்தெரு பகுதியில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான சாந்து சாலை.
காரைக்குடி இடையர்தெரு பகுதியில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான சாந்து சாலை.
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடியில் 75 ஆண்டுகளாகச் சேதமடையாத சாந்து சாலையைப் பாரம்பரியச் சுற்றுலாச் சாலையாக அறிவிக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, புதிய சாலை அமைத்த ஓராண்டுக்குள்ளேயே சேதமடைந்து விடுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 75 ஆண்டுகளாகச் சேதமடையாத சாந்து சாலை உள்ளது. இச்சாலை, இடையர் தெரு நான்கு சாலை சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் வரை என 3 கி.மீ. தூரம் செல்கிறது.

கடந்த 1949-ம் ஆண்டு செட்டிநாடு கலாச் சார அடிப்படையில் அமைக் கப்பட்டது. கடுக்காய், கருப்பட்டி, சுண்ணாம்பு போன்ற கலவையால் சாந்து சாலையாக அமைக்கப்பட்டதால் 75 ஆண்டு களாகியும் சேதமடையாமல் உள்ளது. இன்றும் வழுவழுப்பாக இருக்கும் இச்சாலையை, பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக 2 முறை உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

பின்னர், சாலையையொட்டி 3 இடங்களில் குழிகளைத் தோண்டி பாதாள சாக்கடை பணி நடைபெற்றது. தற்போது, இச்சாலையில் தார் சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 75 ஆண்டு கால இச் சாலையைப் பாரம்பரியச் சுற்றுலாச் சாலையாக அறிவிக்க வேண்டுமென, காரைக்குடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடி தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.ராசகுமார் கூறுகையில், ‘பழமையான இந்தச் சாந்து சாலை வழியாக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளுடன் சென்று வருகின்றன. ஆனால், ஒரு சிறிய சேதம்கூட ஏற்படவில்லை.

சாலையின் இருபுறமும் பட்டியல் கற்கள் வைத்துள்ளனர். இன்னும் 500 ஆண்டுகளுக்கு இச்சாலை சேதமடையாது. இதன்மூலம் சேதமடையாமல் எப்படி சாலை அமைக்கலாம் என்பதை நவீன பொறியாளர்கள் கற்றுக்கொள்ளலாம். இச்சாலை மீது தார் சாலை அமைக்கக் கூடாது. இதைப் பாரம்பரியச் சுற்றுலாச் சாலையாக அறிவிக்க வேண்டும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in