சாதிச் சான்றுக்காக தொடர்ந்து போராடும் காட்டுநாயக்கன் சமூகத்தினர்!

சாதிச் சான்றுக்காக தொடர்ந்து போராடும் காட்டுநாயக்கன் சமூகத்தினர்!
Updated on
2 min read

இந்தியாவில் பழங்குடியினர் பட்டியலில் 37 பிரிவுகள் உள்ளன. இதில் 9-வது பிரிவில் இடம்பெற்றுள்ளது ‘காட்டுநாயக்கன்’ சமூகம். இவர்களது கலாச்சார முறைகள், சமகாலத்தில் இருந்து மாறுப்பட்டது. எழுத்து வடிவம் இல்லாத மொழியை பேசுகின்றனர். கடவுள் வழிபாட்டிலும் உருவ வழிபாடு கிடையாது. வேப்ப மரத்தின் கீழே 3 கற்களை நட்டு வழிபடுகின்றனர். குலதெய்வமாக காட்டுமுனீஸ்வரர் மற்றும் பெரியாயி ஆகியோரை வணங்கி வருகின்றனர்.

குலத்தொழிலாக சிறு விலங்குகளை வேட்டையாடுதல், மூலிகை வைத்தியம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். காட்டுநாயக்கன் சமூகத்தின் திருமண சடங்கு என்பது, அவர்களது மரபு வழியே இன்றளவும் நடத்தப்படுகிறது. காரணவர்கள் (மூத்தவர்கள்) முன்பு நடுவீட்டில் பொட்டு தாலி கட்டும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

இவர்களது இறுதி சடங்கு விசித்திரமானது. கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்தால் அவரது வயிற்றில் உள்ள சிசுவை வெளியே எடுத்து, பின்னர் வயிற்றில் கருவாட்டு குழம்பு சோறு வைத்து தைத்துவிடுவர். பின்னர், பெண்ணின் மடியில் சிசுவை வைத்து அடக்கம் செய்கின்றனர். மற்றவர்கள் உயிரிழந்தால் அவர்களை கைப்பாடையில் தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்கின்றனர்.

பழங்குடியினருக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீட்டின் மூலமாக பல்வேறு சலுகையை வழங்கினாலும், அவர்களால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிரகாசிக்க முடியவில்லை. இதற்கு சாதிச் சான்றிதழ் பெறுவது தடையாக உள்ளது. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தில் உள்ள கோட்டாட்சியர்கள், அவர்களது பணி பாதுகாப்பு கருதி, பல கேள்விகளை எழுப்பி விண்ணப்பங்களை நிராகரிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிக் கல்வியை கடந்து உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். அரசாங்க பணியும் கிடைக்கவில்லை. இந்த நிலை விழுப்புரம் மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காட்டுநாயக்கன் மற்றும் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோவிந்தன் கூறியது, “2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தமிழகத்தில் 5 லட்சம் காட்டுநாயக்கன் சமூகத்தினர் வாழ்கின்றனர். இதன் எண்ணிக்கை தற்போது உயர்ந்திருக்கும். பழங்குடியினர் பட்டியலில் 9-வது பிரிவில் உள்ள காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘பழங்குடி சாதிச்சான்று’ (எஸ்டி) வழங்க கோட்டாட்சியர்கள் மறுக்கின்றனர்.

எங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. நாங்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. பிற சமூகங்களிடம் இருந்து திருமணம் மற்றும் இறுதி சடங்கு வேறுபட்டு இருக்கும். எங்களை ஆய்வு செய்த மானுடவியல் நிபுணர்கள் எங்களது கலாச்சாரத்தை உறுதி செய்து, காட்டு நாயக்கன் என சான்றளிக்கின்றனர். இதனையும் கோட்டாட்சியர்கள் ஏற்க மறுக்கின் றனர். கல்வியை தொடர முடியாமல் குலத் தொழிலுக்கும், பிற கூலி வேலைக்கும் பிள்ளைகள் சென்று விடுகின்றனர்.

இதனால் அரசுப்பணி என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. வட மாநிலங்களில் பழங்குடி சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதால் அங்கு வாழும் காட்டுநாயக்கன் சமூகத்தினர் கல்வியறிவு பெற்று அரசுப் பணியில் உள்ளனர். தமிழகத்தில் அரசுப் பணியும், உயர்ந்த பதவியும் என்பது கானல் நீராகவே இருக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in