

திருநெல்வேலி: தமிழகத்தில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தனி செயலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சென்னைக்கு வந்தபோது, மதுரை - தூத்துக்குடி இருப்பு பாதை திட்டம் குறித்து வெளியான கருத்து, தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே துறை சார்பாக அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.
ரயில்வே துறை வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது என்று பயணிகள் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சியை கருத்தில் கொண்டு தனி அமைச்சகம், தலைமைச் செயலகத்தில் தனி செயலகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி எட்வர்ட் ஜெனி கூறியதாவது: தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலமான கேரளம் ரயில்வே துறையில் தமிழகத்தை விடவும் 20 ஆண்டுகள் முன்னோக்கி வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் அம்மாநிலத்தில் தனி ரயில்வே அமைச்சர் உள்ளார்.
1,050 கி.மீ. தூரம் இருப்பு பாதை கொண்ட கேரளாவில் ரயில்வே வளர்ச்சிக்கு என அமைச்சர் செயல்பட்டு, புதிய ரயில்வே திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு போராடி பெற்று, வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
கேரள அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொகுத்து, மிகப்பெரிய கோரிக்கை பட்டியல் தயார் செய்து, மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து அளிக்கிறார்.
இப்படி செயல்பட்டு அம்மாநில கோரிக்கையை வென்றெடுக்கிறார்கள். பட்ஜெட்டின்போது அதிக நிதி ஒதுக்கீடு, புதிய ரயில்கள் என அம்மாநிலம் சாதித்து வருகிறது. ஆனால், தமிழகம் ரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழகத்தில் 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கு சர்வே செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை, காலநிலை மாற்றத் துறை என புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல் ரயில்வே துறையில் வளர்ச்சி பெறுவதற்கு ரயில்வே அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். தமிழக பயணிகள் பயன்படும் விதமாக புதிய ரயில்கள் இயக்குதல், தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றம் செய்தல், புதிய இருப்பு பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பல ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்கு தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சகம் அமைத்து அதற்கு அமைச்சரையும், தலைமை செயலகத்தில் தனித்துறை அமைத்து அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியையும் நியமிக்க வேண்டும்.
இதுபோல், ரயில்வே சம்பந்தமான அனைத்து பணிகளையும் மத்திய அரசின் ரயில்வே துறையில் தெற்கு ரயில்வே மண்டல அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு மாவட்ட அளவில் ரயில்வே அதிகாரியை நியமிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட அளவில் ரயில்வே வளர்ச்சி பணிகளை கவனிப்பதற்கு என தனி அதிகாரியை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.