Published : 13 Jul 2018 06:23 PM
Last Updated : 13 Jul 2018 06:23 PM

பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பிசியோதெரபிஸ்ட்: கூலிப்படை மூலம் கொன்ற சென்னை கல்லூரி மாணவி கைது

பிசியோதெரபிஸ்ட் ஒருவர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதால் அவரைக் கொலை செய்த சென்னை கல்லூரி மாணவி கூலிப்படையுடன் கைது செய்யப்பட்டார்.

திருச்சி திருவானைக்காவலில் இருந்து கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றுக் கரையோரம் புதர் பகுதியில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் வர அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் இளைஞர் ஒருவர் பிணமாகக் கிடப்பது தெரியவந்துள்ளது.

பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் காணாமல் போனவர்கள் பற்றி ஏதாவது புகார் வந்துள்ளதா? என புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரித்துள்ளனர். இதற்கிடையே செந்துரையைச் சேர்ந்த விஜயகுமார் கடந்த 7-ம் தேதி மனைவியைப் பார்க்க ஈரோடு சென்றவர் காணவில்லை என அவரது தந்தை ஆறுமுகம் என்பவர் செந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்த தகவல் ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு வர அவர்கள் ஆறுமுகத்தை வரவழைத்துப் பிணத்தைக் காட்டியுள்ளனர்.

அது தனது மகன் விஜயகுமார்தான். அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்ததாக ஆறுமுகம் தெரிவித்தார். சென்னையில் பணியாற்றும் விஜயகுமார் திருச்சிக்கு ஏன் வந்தார்? அவரைக் கொலை செய்தது யார்? என போலீஸார் விசாரணையில் இறங்கினர். விஜயகுமார் யாரிடம் கடைசியாக தொடர்பு கொண்டு பேசினார் என்று அவரது செல்போன் எண்ணை எடுத்து போலீஸார் ஆய்வு செய்தபோது திருச்சியில் ஒரு நம்பருக்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது.

அந்த நம்பரை எடுத்து விசாரித்தபோது அது சென்னையில் வாங்கப்பட்ட சிம்கார்டு என்றும், நுங்கம்பாக்கத்தில் தங்கிப் படித்து வரும் மாணவி ஒருவரது செல்போன் எண் என்பதும் தெரிய வந்தது. சென்னையில் சிஏ படித்துவரும் மாணவி கலாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நம்பர் என்பது தெரியவந்தது. உடனடியாக கலாவைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறிய தகவல்கள் போலீஸாரைத் திடுக்கிட வைத்தது.

குளித்தலையைச் சேர்ந்த தனது தந்தை லாரி ஓட்டுநர் என்றும், அம்மா இறந்துவிட்டார், ஒரே ஒரு தங்கை மட்டுமே உள்ளார். திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த தாம் 2013-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்ததாகவும், பிளஸ் 2-வில் தேர்வில் 1183 மதிப்பெண் எடுத்ததாகவும், சிஏ படிப்பை சென்னையில் சி.ஏ. படித்து வருவதாகவும், பயிற்சிக்காக பாரிமுனையில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் கலா தெரிவித்துள்ளார்.

பிசியோதெரபிஸ்ட் விஜயகுமாரை (36) எதேச்சையாக 6 மாதத்துக்கு முன் ஊரிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததாகவும், அப்போது ஏற்பட்ட நட்பு நெருக்கமானதாகவும், ஒரு நாள் தனது அறைக்கு தன்னை அழைத்த விஜயகுமார், மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்ததாகவும் கலா கூறியுள்ளார்.

பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டிய விஜயகுமார், வீடியோவை வைத்து மிரட்டியே கலாவை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள கலா கேட்டபோது, நான் ஏற்கெனவே திருமணம் ஆனவன், மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்  என்று கூறியுள்ளார்.

பின்னர் கலா தனது ஆசைக்கு அவ்வப்போது இணங்கவேண்டும் இல்லாவிட்டால் வீடியோவை இணையதளத்தில் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் விஜயகுமாரிடமிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் கலா அழுது புலம்பியுள்ளார். கடந்த 7-ம் தேதி கலா திருச்சி சென்றுள்ளார். அப்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் அமர்ந்து தனது நிலையை எண்ணி அழுதுள்ளார்.

அங்கு ரவுடி ஒருவர் அனைவரையும் மிரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் சென்று தனக்கு நேர்ந்த துயரத்தைச் சொல்லி விஜயகுமாரைக் கொல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். திருச்சி இ.பி. சாலையை சேர்ந்த மாரிமுத்து (33) என்ற அந்த ரவுடி நான் கொலை செய்கிறேன், ஆனால் அதற்கு ரூ.1 லட்சம் கூலி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவ்வளவு தொகை இல்லை 55 ஆயிரம் உள்ளது என்று கூறி முதலில் ரூ. 5 ஆயிரம் கொடுத்த கலா மாரிமுத்துவிடம் எப்படி கொல்லப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். “திருவளர்சோலை அருகே காவிரி ஆற்றுக் கரையோரம் புதர் பகுதிக்கு எப்படியாவது அவனை அழைத்து வந்துவிடு, நாங்கள் வழிப்பறி செய்வதுபோல் அவனை போட்டுத்தள்ளிட்டு போய் விடுகிறோம், நீ உன் வழியைப் பார்த்து போய் சந்தோஷமாக இரு” என்று மாரிமுத்து கூறியுள்ளார்.

அதன்படி பெருந்துறையிலிருந்து கடந்த 8-ம் தேதி மனைவியை சந்திக்க ஈரோடு செல்லவிருந்த விஜயகுமாரை போன் செய்து திருச்சிக்கு அழைத்துள்ளார் கலா. திருச்சி வந்த விஜயகுமார், தனது சபல புத்தியால் கலா அழைத்த திருவளர்சோலை காவிரி ஆற்றுப் பகுதி புதர் பக்கம் சென்றுள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி மாரிமுத்து அங்கு தனது கூட்டாளிகளுடன் வழிப்பறி செய்வதுபோன்று வர விஜயகுமாரைப் பிடித்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடியுள்ளனர்.

பிறகு கலா மீதிப் பணத்தை மாரிமுத்துவுக்கு கொடுத்துவிட்டு சென்னை சென்றுவிட்டார். வழிப்பறியில் நடந்த கொலை என எளிதாக முடிந்துவிடும் என்று கலா போட்ட கணக்கு தப்புக்கணக்காக முடிந்தது. செல்போன் பேச்சு அவரை காட்டிக்கொடுத்தது. கலா கொடுத்த தகவலின் பேரில் மாரிமுத்து, அவரது கூட்டாளிகள் குமார் (25), கணேசன் (23) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீஸார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியதால் உயிரையே பறிகொடுத்த விஜயகுமாரின் மோசமான முன் கதையைக் கேட்டு அவர் மனைவி பிணத்தை வாங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கலா கூறும் திருச்சி பேருந்து நிலைய சம்பவத்தை போலீஸார் நம்பத் தயாராக இல்லை.

கலாவுக்கு கூலிப்படையை அவரது ஆண் நண்பர் யாரேனும் ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

“பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்...” - ரக்‌ஷிதா ‘கலகல’ பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x