136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் தீவிரம்: தமிழக பாடநூல் கழகம் தகவல்

136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் தீவிரம்: தமிழக பாடநூல் கழகம் தகவல்
Updated on
1 min read

தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பு மானியத் திட்டத்தின் கீழ் 136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலன் கருதியும், தமிழ் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்தவகையில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பன்னாட்டு புத்தகக் காட்சி-2025 நிறைவு விழாவில் தமிழக பாடநூல் கழகம் தயாரித்த 75 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்விவரம்: திசைதோறும் திராவிடம் திட்டத்தில் 15 நூல்கள், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் 32, நாளைய தலைமுறைக்கு நாட்டுடமை நூல்கள் பிரிவு மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தில் தலா 3, நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பிரிவில் 2, சிறார்களுக்கு உலக இலக்கியங்கள் பிரிவில் 8, செவ்வியல் இலக்கியங்கள் எளிய உரைகள், அரிய நூல்கள் ஆங்கில மொழியாக்கம் தொகுதியில் தலா 1, உலக மொழிகளில் பெரியார் சிந்தனைகள் மொழிகள் 10 என மொத்தம் 75 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல், தமிழக அரசின் மானியத்தின் வாயிலாக முதல்கட்டமாக மொழிப் பெயர்க்கப்பட்ட 30 நூல்களும் வெளியிடப்பட்டன. அதன்படி பத்துப்பாட்டு நூல்கள், ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி மலாய் மொழியிலும், பாரதிதாசனின் கவிதைகள், எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு குமிழிகள் அரபி மொழியிலும், பெரியார் தன் காலத்தை தாண்டி சிந்தித்த முன்னோடி, ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், பூமணியின் பிறகு, ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் ஆகியவை கொரிய மொழியிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர பெருமாள் முருகனின் பூனாச்சி ஆர்மீனிய மொழியிலும், 'இந்து தமிழ்திசை' நாளிதழுடன் இணைந்து வெளியிட்ட மாபெரும் தமிழ் கனவு குஜராத்தி, பெங்காலி மற்றும் இந்தியிலும், யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள், கவிஞர் வைரமுத்துவின் கருவாச்சி காவியம், சு.தமிழ்ச்செல்வியின் அளம் மலையாளத்திலும், மலாய் மொழியில் 3 நூல்களும், சுவாஹிலி, கன்னடம், மராத்தி மொழிகளில் தலா 1 நூலும் வெளியிடப்பட்டட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு திட்டங்களின் கீழ் 136 நூல்கள் பிற மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in