அமெரிக்க பெண் வைத்துள்ள ரூ.280 கோடி மதிப்பு சிலைகளை மீட்க பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்

அமெரிக்க பெண் வைத்துள்ள ரூ.280 கோடி மதிப்பு சிலைகளை மீட்க பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்
Updated on
1 min read

ரூ.280 கோடி மதிப்பிலான 39 சுவாமி சிலைகளை அமெரிக்க பெண்ணிடமிருந்து மீட்க வேண்டும் என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாப்பாங்குளம் பகுதியில் உள்ள திருவெண்காடர் கோயிலில் 700 ஆண்டுகள் பழமையான வீணாதர தட்சிணாமூர்த்தி சிலை 45 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போனது. அந்த சிலை தற்போது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள சுஷ்மா ஷெரீன் என்ற பெண்ணிடம் உள்ளது. அவர் தற்போது அந்த சிலையை ரூ.12 கோடிக்கு ஏலத்தொகை நிர்ணயம் செய்து, விற்பனை செய்ய முற்பட்டுள்ளார்.

இதேபோல, அவரிடம் ரூ.280 கோடி மதிப்பிலான 39 சிலைகள் உள்ளன. இவை அனைத்தும் தமிழகத்தில் இருந்தவை. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் பல்வேறு ஆவணங்களை வழங்கியும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அனைத்து சிலைகளையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் வரி வசூல் செய்யும் அரசு, கோயில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட வழங்க மறுத்து வருகிறது. கோயில்களில் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்வதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பொன் மாணிக்க வேல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in