“டாஸ்மாக் மட்டுமே சக்சஸ்!” - பாஜக ‘இலவச’ வாக்குறுதிகளும், அண்ணாமலை நழுவலும்

“டாஸ்மாக் மட்டுமே சக்சஸ்!” - பாஜக ‘இலவச’ வாக்குறுதிகளும், அண்ணாமலை நழுவலும்
Updated on
2 min read

நாமக்கல்: “தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எல்லாம் தோல்வி. டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதேநேரத்தில், டெல்லி தேர்தலில் பாஜக வெளியிட்டுள்ள ‘இலவச’ வாக்குறுதிகள் குறித்து நழுவலுடன் மழுப்பலாகவே கருத்து சொன்னார் அண்ணாமலை.

திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியது: “பாஜக உண்மையான ஜனநாயக கட்சி. 33 மாவட்ட தலைவர்கள் அறிவித்துள்ளோம். மீதமுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வரும். பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளது. முதல் கட்டமாக 48 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முழு நேரமாக வேலை செய்ய தீவிர உறுப்பினர்கள் 55 ஆயிரம் பேர் பாஜகவில் உள்ளனர். மாநில தலைவர் தேர்தல் முடிந்த பிறகு 2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.

அமைச்சர் சேகர்பாபு போல ஏளனப் பேச்சு பேசினால் அழிவு நிச்சயம். துணை முதல்வர் உதயநிதி மகனுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் நிற்கும் அவல நிலை அலங்காநல்லூரில் நடந்துள்ளது. தென்னிந்தியாவில் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளது. ஐஏஎஸ் தேர்வில் 40-வது ரேங்கில் உள்ளனர். அடுத்த கட்டத்திற்கு மாணவர்கள் தயார் படுத்தப்படவில்லை. விவசாயத்தில் முதல் 10 மாசுபட்ட ஆறுகளில் 6 தமிழகத்தில் உள்ளன. சுற்றுசூழல் மைனிங், மணல் எடுப்பது, ஆழ்துளை கிணறுகள் என அதிகரித்து வெப்பம் அதிகமாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செவிலியர் பிரசவம் பார்த்து குழந்தை இறப்பு செய்தி வருகிறது. ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறை என அதிகரித்து வருகிறது. எல்லாம் தோல்வி. டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனப் படங்கள் தயாரித்து வந்தவர்கள் டைரக்‌ஷன் செய்கிறார்கள். வேங்கை வயல் குறித்து முதல்வர் பேசுவதில்லை. அண்ணா பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை. காவல் துறை பொங்கல் விழாவில் 8 பேரிடம் செயின் பறிப்பு. அதனால் தான் மாற்றம் தேவை என்கிறோம்.

அனைத்தும் தோல்வி, அமைச்சர் பொன்முடி பேசும் போது “நீ எஸ்.சி. தானே?” என கேட்கிறார். இவர்கள் சமூக நீதியை பற்றி பேசுகிறார்கள். உட்கட்சியில் சமூக நீதி கிடையாது. இவர்கள் நமக்கு சமூக நீதி குறித்து பாடம் எடுக்கிறார்கள். இவர்கள் கொடுப்பது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். அம்பேத்காரை தூக்கி கொண்டு திரிகிறார்கள். அம்பேத்கார் விலகியதற்கு காரணம் உரிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பதுதான்.

இரு மதங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் நம்மை மதவாதிகள் என்கிறார்கள். இப்தார் விருந்தில் மட்டும் குல்லா போட்டு உட்காருபவர்கள் மதசார்பின்மை குறித்து பேசிகிறார்கள். ரூ.46 லட்சம் கோடி கடன் வாங்கி கடன்கார மாநிலமாக குடிகார மாநில மாற்றி வைத்துள்ளனர். இவர்களை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று அண்ணாமலை பேசினார்.

இதைத் தொடர்ந்து, இலவசங்களை எதிர்க்கிறோம் என சொல்லும் பாஜக, டெல்லி தேர்தலில் இலவசங்களை வாரி வழங்குவது சரியா என செய்தியாளர்கள் கேட்டதற்கு "நான் தமிழகத்துக்கு தான் தலைவர். மராட்டியத்தில் என்ன நடக்கிறது, மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது. டெல்லியில் என்ன நடக்கிறது என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழகம் ரூ.10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. இதை கட்டி முடிக்க இன்னும் கட்ட பல ஆண்டுகளாகும்.

தமிழகத்தில் அடிப்படைத் தேவைகளுக்கு செலவு செய்வதில்லை. ஏனென்றால் தேவையில்லாதவற்றுக்கு அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றோம். மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக் கொள்வோம், வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்” என்றார் அண்ணாமலை.

தமிழகத்தில் திராவிட ஆட்சியால் தான் அருந்ததிய மக்கள் மருத்துவ படிப்பிற்கு அதிக அளவில் சேர முடிகிறது என அமைச்சர் மதிவந்தன் கூறி உள்ளாரே எனக் கேட்டபோது, "அருந்ததிய சமுதாய மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி இன்றைக்கு கொடுத்து படிக்கச் சொல்லும் நீங்கள் சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது? எத்தனை முறை நீங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள்... திமுக ஐந்து முறை ஆட்சியில் தற்போது ஆறாவது முறையாகும் ஆட்சியில் இருந்து வருகிறது. அப்போதெல்லாம் என்ன கழட்டினீங்க, எண்ணத்தை கிழிச்சீங்க என அமைச்சரிடம் நான் கேட்கிறேன்.

இன்றைக்கும் பட்டியல் சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ளது என்று வாய் கிழிய பேசி வருகிறீர்கள். 75 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஒரு கட்சி பட்டியல் சமுதாய மாணவர்களை உயர்த்துவதற்கு என்ன செய்து உள்ளீர்கள்" என்றார் அண்ணாமலை. பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in