பரந்தூரில் விஜய் பங்கேற்கும் கூட்டத்தை அம்பேத்கர் திடலில் நடத்த முடிவு: சீரமைப்பு பணி தீவிரம்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ள ஏகனாபுரம் திடல்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ள ஏகனாபுரம் திடல்.
Updated on
2 min read

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் பொதுமக்களுடன் விஜய் பங்கேற்கும் சந்திப்புக் கூட்டம் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் நடத்துவதா? திருமணம மண்டபத்தில் நடத்துவதா என்பதில் இருந்த இழுபறி முடிவுக்கு வந்தது. பொதுமக்களுக்கு வசதியாக அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் நடத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 5100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராடும் பொது மக்களுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து போராடும் மக்களை சந்திக்கவும் முடிவு செய்தார்.

போராட்டக் குழுவினர் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன் உள்ள விளையாட்டு திடலில் விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். ஆனால் விஜய்யின் பாதுகாப்பை காரணம் காட்டி காவல்துறை தரப்பில் அனுமதி மறுத்தனர். தனியார் திருமண மண்டபத்தில் நடத்தவும் அறிவுறுத்தினர். போராட்டக் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொது மக்கள் கூட்டத்தை குறைக்கவும், ஏகனாபுரத்தில் இருந்து பொதுமக்களை 7 கி.மீ வரவைக்கவும் திட்டமிட்டு காவல்துறையினர் இதுபோல் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக போராட்டக் குழுவினர் திட்டமிட்டிருந்த அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடல் சேரும் சகதியுமாக மாறியது. இதனைத் தொடர்ந்து பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலேயே விஜய் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர்.

போலீஸார் அனுமதியுடன் அவர் கூறிய திருமண மண்டபத்திலேயே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த திட்டமிட்டனர்.

மக்கள் விருப்பப்படி திடலில் கூட்டம்: போராடி வரும் பொதுமக்கள் பலர் சேரும் சகதியுமாக உள்ள இடத்தை சரி செய்துவிடலாம் என்றும், அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யும்படியும் போராட்டக் குழுவினரிடம் வலியுறுத்தினர். தவெக நிர்வாகிகள் மத்தியிலும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கூடுவதற்கு திடல்தான் சரியான இடம் என்ற கருத்தும் நிலவியது. இதனைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலர் ஆன்ந்த் மற்றும் நிர்வாகிகள் காவல்துறை, போராட்டக் குழுவினரிடம் கலந்து பேசினர். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் விஜய் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in