Published : 19 Jan 2025 04:23 PM
Last Updated : 19 Jan 2025 04:23 PM

‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..’ - பாட்டுப் பாடி பழைய ‘கவனிப்பை’ நினைவூட்டிய ஈரோடு கிழக்கு வாக்காளர்கள்

ஈரோடு: கடந்த இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே’ என்று பாடல் பாடி, வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் திமுக வேட்பாளரை, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வரவேற்றதால் கலகலப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி தலைமையிலான திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம், வீடு, வீடாக நடந்து சென்று சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். எந்த கட்சியையும் விமர்சனம் செய்யக்கூடாது’ என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் முத்துசாமி வெளிப்படையாக அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில், அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள், கடந்த ஒரு வாரமாக, வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

‘ஆரத்திக்கு மட்டுமே கவனிப்பு!’ ஈரோடு கிழக்கு தொகுதியில் 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது, 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு, வாக்குறுதிகளை அள்ளி விட்டும், பணம், பரிசு பொருட்களை வழங்கியும், அசைவ விருந்து வைத்தும் வாக்காளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினர். ஆனால், இம்முறை உள்ளூர் அமைச்சர் தவிர வேறு யாரும் களத்துக்கு வராததால், வாக்காளர்களிடம் உற்சாகம் இல்லாத நிலை உள்ளது.
அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்திற்கு வரும் போது, கட்சி நிர்வாகிகளால், ஆரத்தி எடுக்க பெண்கள் தயார் படுத்தப்படுகின்றனர். தட்டுக்கு ரூ.100 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதைத்தவிர வேறு எந்த கவனிப்பும் இல்லாத நிலை தொடர்கிறது.

அதிர்ச்சி அடைந்த அமைச்சர்: இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் தொடர்வதால், வாக்கு கேட்க செல்லும் அமைச்சர் முத்துசாமியிடம், வாக்காளர்கள் நேரடி கேள்வி எழுப்பி நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அன்னை சத்யா நகர் பகுதியில் இன்று காலை திமுக வேட்பாளர் சந்திரகுமாருடன், அமைச்சர் முத்துசாமி பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவர் பிரச்சாரம் தொடங்கிய முதல் வீட்டிலேயே உற்சாக வரவேற்பு கிடைக்கவில்லை.

“ஆக்கிரமிப்பு என்று எங்கள் வீட்டினை இடித்தது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தோம். யாரும் வந்து பார்க்கவில்லை. இப்போது ஓட்டு கேட்டு வந்தால் எப்படி வரவேற்போம்.” என அந்த குடும்ப தலைவர் கேள்வி எழுப்ப, அமைச்சர் முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார். மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், அந்த குடும்பத்தினரை சாமாதானப்படுத்திய நிலையில், அங்கிருந்து பிரச்சாரக் குழு நகர்ந்தது.

இதேபோல், அன்னை சத்யா நகர் குடியிருப்புவாசிகள் தங்களுக்கென கட்டப்பட்ட மாற்று குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள குளறுபடிகளை பட்டியலிட்டு, அமைச்சரை முற்றுகையிட்டனர். அதேபோல், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என பொதுமக்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.

கேட்டாரே ஒரு கேள்வி..! “கடந்த முறை வெற்றி பெற்றபோது நன்றி சொல்லக் கூட வரவில்லை. இந்த முறையாவது வெற்றி பெற்றால் தொகுதி பக்கம் வாருங்கள்” என்று வேட்பாளர் சந்திரகுமாரிடம் பெண் ஒருவர் வெளிப்படையாக கூறி, கமெண்ட் அடித்ததார். கடந்த 2011 தேர்தலில் இதே தொகுதியில் தேமுதிக சார்பில் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். 10 ஆண்டுகளைக் கடந்தும் ஞாபகம் வைத்து பெண் வாக்காளர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடிந்து கொண்ட அமைச்சர்.. அதேபோல், இன்றைய வாக்கு சேகரிப்பின்போது திமுக கொடிகள் மட்டும் இருப்பதைக் கண்ட அமைச்சர் முத்துசாமி, ‘கூட்டணி கட்சி கொடிகள் எங்கே போனது. அவர்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை’ என்று கட்சி நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டார்.

‘பழைய கவனிப்பு’ - இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு மத்தியில், திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபடி அமைச்சர் குழுவினர் வாக்கு சேகரித்தனர். அன்னை சத்யா நகரின் ஒரு தெருவில், கடந்த இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே…’ என்ற சிவாஜி படப்பாடலை பாடியவாறு வாக்காளர்கள் வரவேற்றதால், அமைச்சர் உள்ளிட்டோர் உற்சாகமாகினர்.

அடுத்த கட்ட பிரச்சார பயணத்தில் இது போன்ற குறைகளை முன்கூட்டியே சரி செய்ய வேண்டும் என அமைச்சர் முத்துசாமி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x