வனப்பகுதி மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதா? - வனத்துறை அறிவிப்புக்கு இ.கம்யூ., கண்டனம்

இரா.முத்தரசன் | கோப்புப் படம்.
இரா.முத்தரசன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு வனத்துறையின் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம், கால்நடை மேய்ச்சல் தொடர்பாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். வனத்துறை, வனப்பகுதி மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வனத்துறையின், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகம், வனப்பகுதிகளில் கால்நடைகள் நுழைவது, மேய்ப்பது, வளர்ப்பது, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் 2022ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்புரையை மேற்கோள் காட்டி “முக்கிய அறிவிப்பை” வெளியிட்டுள்ளது.

வனத்துறையின் அறிவிப்பு 2006ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசு நிறைவேற்றிய வன உரிமைச் சட்டம் அங்கீகரித்துள்ள கால்நடை மேய்ச்சல் உரிமையை மறுக்கும் சட்ட விரோத அறிவிப்பாகும். 2006 வன உரிமைச் சட்டப்படி, பழங்குடியினர் மற்றும் வனம் சார்ந்து வழிவழியாக வாழ்ந்து வரும் மக்களின் பாரம்பரிய உரிமைகளை பதிவு செய்து, அங்கீகரிக்க மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டப்பூர்வ குழுக்களில் வனத்துறையும் இடம் பெற்றுள்ள நிலையில், தன்னிச்சையாக ஒரு அறிவிப்பை, நீதிமன்ற தீர்ப்புரையை மேற்கோள் காட்டி வெளியிடுவது அரசையும், நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தும் உள் நோக்கம் கொண்டது.

இதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுவதுடன், நீதிமன்ற தீர்ப்புரைகள் வனப்பகுதியில் மக்களின் வாழ்க்கை முறையை பாதிக்கும் வகையில் இருக்கும் எனில், அதன் மீது மேல் முறையீடு, மறு ஆய்வு, சீராய்வு என சட்ட ரீதியாக அணுக வேண்டிய வனத்துறை, வனப்பகுதி மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு வனத்துறையின் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம், கால்நடை மேய்ச்சல் தொடர்பாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in