Published : 19 Jan 2025 12:00 PM
Last Updated : 19 Jan 2025 12:00 PM
சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் புறநகரில் 672 வழித்தடங்களில் 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை இயக்க போதிய ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லாத சூழலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இதனை சரி செய்யும் வகையில் பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கு டீசல் நிரப்புதல் போன்ற பணியில் இருந்த ஓட்டுநர்களை, வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் பணியமர்த்த மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக பணிமனை ஓட்டுநர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டனர். அதேநேரம், ஆண்டுதோறும் நிரந்தர பணியாளர்கள் ஓய்வுபெற்று வருகின்றனர். ஆனால், புதிய பணியாளர்கள் நியமனம் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர எந்த போக்குவரத்துக் கழகத்திலும் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், தொழிற்சங்கத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி வழித்தடத்திலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப் பட்டனர். இருப்பினும், ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய நியமனங்கள் இல்லை. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 25,219 பேர் பணியில் இருந்தனர். இதில் கடந்த ஆண்டு நிலவரப்படி 19,415 பேர் பணியில் இருந்தனர். நடப்பாண்டில் மேலும் 680 பேர் ஓய்வு பெறுகின்றனர். எனவே, புதிய நியமனத்துக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியதாவது: விகிதாச்சாரப்படி ஒரு பேருந்தை இயக்க 2.625 ஓட்டுநர் தேவை. ஆனால் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தேவையான விகிதம் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் மக்கள் சேவை பாதிக்கப்படுகிறது. இதனை அறிந்தும் அரசு தரப்பில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக தனியார் மயத்தை நோக்கி போக்குவரத்துக் கழகங்கள் செல்கின்றன.
தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கும்போது அங்கு இடஒதுக்கீட்டு நடைமுறை இருக்காது. ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்காது. இப்போதும், ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு வருவோர் கூடுதல் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், முதலில் வந்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இது தொழிலாளர் உரிமைக்கு எதிராக இருக்கிறது.
இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனத்தின் மூலம் பேருந்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு தனியார் மயத்தை நோக்கிச் செல்வது சேவைத்துறைக்கு நல்லதல்ல. எனவே, புதிய நியமனம் தொடர்பான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT