

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, காட்டாங்கொளத்தூர் - தாம்பரம் இடையே நாளை சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ரயில்கள், பேருந்துகள், கார்கள் மூலமாக பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். பெரும்பாலானோர் நாளை திங்கள்கிழமை (ஜன.20) காலை திரும்ப திட்டமிட்டுள்ளனர். அவர்களது வசதிக்காக, காட்டாங்கொளத்தூர் - தாம்பரம் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
காட்டாங்கொளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு நாளை அதிகாலை 4.00, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு இந்த ரயில்கள் புறப்படும். பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூரில் இவை நின்று செல்லும். இதுபோல, தாம்பரத்தில் இருந்து காட்டாங்கொளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு 2 ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி பேருந்துகளில் வருபவர்கள் காட்டாங்கொளத்தூர், பொத்தேரி உள்ளிட்ட நிறுத்தங்களில் இறங்கினால், சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் மூலம் நகருக்குள் எளிதாக வரமுடியும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். பயண நேரம் சற்று குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.