Published : 19 Jan 2025 07:41 AM
Last Updated : 19 Jan 2025 07:41 AM
சென்னை: சென்னையைத் தொடர்ந்து சேலம், மதுரை, நெல்லை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 8 நகரங்களில் 'சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கலை பண்பாட்டுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 'சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' என்ற பிரமாண்ட கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் கலை நிகழ்ச்சிகளை கடந்த ஜன.13-ம் தேதி கீழ்ப்பாக்கம் ஏகாம்பர நாதர் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 260 கலைஞர்கள் பிரம்மாண்ட மேடையில் வழங்கிய நிகழ்ச்சியினை முழுவதுமாக கண்டு களித்ததுடன், கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியை 5 ஆயிரத்துக்கும் பொதுமக்கள் நேரிலும், இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாகவும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்தனர்.
‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு உள்ளிட்ட 18 இடங்களில் கடந்த ஜன.17ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
இந்த கலைநிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைகளை நிகழ்த்திக் காட்டினர். மேலும், புகழ்பெற்ற 8 பரதநாட்டிய குழுக்கள், 8 குரலிசை குழுக்கள், 16 இசைக்குழுக்கள் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதி நாளான நேற்று முன்தினம் அண்ணாநகர் கோபுர பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றார். புரிசை சம்பந்த தம்பிரான் குழுவினரின் தெருக்கூத்து, விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் கலைக்குழுவினரின் மல்லர் கம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து கலைஞர்களுக்கு பொன்னடை அணிவித்து பாராட்டினார். பங்கேற்ற கலைஞர்களுக்கு தினசரி ரூ.5 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்பட்டது.
விழா நடைபெற்ற இடங்களில் பிரபல உணவகங்களின் உணவுத் திருவிழாவும் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நேரலையிலும், யூ-டியூப் வாயிலாகவும் இணையத்திலும் ஒளிபரப்பப்பட்டது. 18 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்தனர். முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூ-டியூப் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சிகளை கண்டுகளித்துள்ளனர்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT