Published : 19 Jan 2025 07:21 AM
Last Updated : 19 Jan 2025 07:21 AM
சென்னை: தவெக.வின் கொள்கை, கோட்பாடுகளின்படி விஜய், இண்டியா கூட்டணிக்கு வர வேண்டு்ம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்த நாளையொட்டி சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வாழப்பாடி ராமமூர்த்தி தான் வாழ்ந்த காலத்தில், ஒருபோதும் மதவாத சக்திகளை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே கால் பதிக்க விடக்கூடாது என்று போராடியவர். அவரின் குரல் ஏழை மக்களின் குரலாக, ஒட்டுமொத்த தேச மக்களின் குரலாக இருந்தது.
பரந்தூர், ஏகனாபுரம் ஆகியவை எனது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வருகிறது. அங்கு பலமுறை சென்று பார்த்திருக்கிறேன். அங்குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும், அச்சமும் இல்லாமல் விமான நிலைய திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லி இருக்கிறேன். முதல்வரிடமும் இதே கோரிக்கையை விடுத்திருக்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்துகிறோம் என்று மக்களவையில் பாஜக அமைச்சர் சொன்ன பிறகும், இத்திட்டம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
நிதிநிலை மோசமாக இருப்பதால் பொங்கல் தொகுப்பில் பணம் கொடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் பொங்கல் தொகுப்பில் பணம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.
விஜய் தனது கட்சி மாநாட்டில் பேசும்போது, "எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்ளலாம், ஆனால் இந்த இந்துத்துவா சக்தியை அகற்றியே ஆக வேண்டும்" என்று பேசினார். அப்படியெனில் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவதுதான் அவருக்கும் நல்லது, அவரது கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், விஜய் வசந்த் எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT