Published : 19 Jan 2025 07:14 AM
Last Updated : 19 Jan 2025 07:14 AM

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இறுதி வரை எதிர்ப்போம்: திமுக சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இந்திய அரசியலமைப்பை, கூட்டாட்சிக் கருத்தியலை காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக சட்டத் துறையின் 3-வது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆங்கில கலந்துரையாடலில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தையும் தமிழ் மொழியையும் தமிழினத்தையும் காக்கும் காவல் அரணாக விளங்குகிறது திமுக சட்டத் துறை. அண்ணா காலத்தில் வழக்கறிஞர் குழுவாக இருந்ததை, கருணாநிதி சட்டத் துறையாக மாற்றினார். 1975-ல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, நான் உட்பட பலரும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டோம். வெளியில் இருந்த கழகத் தோழர்கள் பலரும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்கள். அவர்களை பாதுகாத்தது சட்டத்துறைதான். மருத்துவம் மற்றும் மருத்துவ உயர் கல்வியில் இன்றைக்கு ஆண்டுதோறும் 5,500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கிறது என்றால், இந்தச் சமூகநீதி சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சாத்தியப்படுத்தியது திமுக சட்டத் துறைதான்.

நம்முடைய சட்டத் துறையில் இருந்து மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உருவாக வேண்டும். நாம் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையான, நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட உரையாடல்களை தொடங்க வேண்டும். மத்தியில் ஆட்சி வகிக்கும் பாஜக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கிளம்பி உள்ளனர். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கின்றனர். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். பிரதமராக இருக்கும் மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை, கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றி விடாதீர்கள். அவர் பேச பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.

வெற்றிப் பயணம் தொடரட்டும்: மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் ஆளுநர் தான். 2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் இளம் வழக்கறிஞர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் புதிய அடையாள அட்டையை முதல்வர் வழங்கினார். மாநாட்டில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை, பாஜக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x