தவெக தலைவர் நடிகர் விஜய் நாளை பரந்தூர் செல்கிறார்: போராட்ட குழுவினருடன் சந்திப்பு
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக 908 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளார். இதற்காக போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 908 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கடந்த அக். 27-ம் தேதி அவர் நடத்திய முதல் மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் போராட்டக் குழுவினரை சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியினர் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து ஜன. 20-ம் தேதி விஜய் வந்து செல்ல போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகத்திடம் கேட்ட போது. “விஜய் ஜன.20-ம் தேதி பரந்தூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் சந்தித்து பேசுகிறார் என்பது குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்” என்றார்.
இதனிடையே பாதுகாப்பு கருதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திருமண மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர் ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.
போலீஸாருக்கும். போராட்டக் குழுவினருக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் உயரதிகாரிகளிடம் போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.
