Published : 19 Jan 2025 06:55 AM
Last Updated : 19 Jan 2025 06:55 AM
சென்னை: அறநிலையத் துறையின் மோசமான நிர்வாகத்தால் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தை நேர்மையான அறங்காவலர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோடிக்கணக்கில் வருமானம் வரும் பழநி கோயிலுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய அறங்காவலர் களாவது, எந்த அதிகாரமும் இல்லாத செயல் அதிகாரியிடமிருந்து கோயில் நிர்வாகத்தை கையில் எடுப்பார்களா என்ற கேள்வியை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் எழுப்பியுள்ளார் ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது. 2020-ல் பழநி கோயில் நிர்வாகம் தொடர்பாக வும், டெண்டர் விடும் அதிகாரம் செயல் அலுவலருக்கு கிடையாது என்று கோரியும் நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பழநி கோயிலில் நிர்வாக அதிகாரியாக செயல் அலுவலர் தொடர முடியாது என்றும், உடனடியாக அறங்காவலர் களை நியமிக்க வேண்டும் எனவும் 2020 செப் 22-ல் தீர்ப்பளித்தது. அந்த தீரப்பை எதிர்த்து அறநிலையத்துறை செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 2021-ல் அறங்காவலர்களை நியமித்து, அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. அதன்பிறகும் பொறுப்புகள் ஒப்படைக்கப்படவில்லை.
இந்நிலையில், பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களாவது சட்டரீதியாக கோயிலின் முழு நிர்வாகப் பொறுப்புகளையும், அதிகாரம் இல்லாத செயல் அலுவலரிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவற்றை ஏற்று நடத்த வேண்டும் என்பதே ஆன்மிகவாதிகளின் விருப்பம்.
தமிழகத்தில் 44,286 கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பொதுவாக, செயல் அலுவலர்களை தக்கார்களாக அசாதாரண சூழலில் 90 நாட்களுக்கு மட்டுமே நியமிக்க முடியும். செயல் அலுவலர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்தான். உண்டியல் வசூலை காரணம்காட்டி, எந்த கோயிலையும் அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
கோயில் சொத்துகளை பாதுகாத்து, வருமானம் ஈட்டும் பொறுப்பு மட்டுமே செயல் அலுவலர்களுக்கு உள்ளது. தவிர, கோயில் நிர்வாகத்திலோ அல்லது பூஜை, மத ரீதியிலான சடங்குகளிலோ தலையீடு செய்ய சட்ட ரீதியாக எந்த தார்மீக உரிமையும் அறநிலையத்துறைக்கு கிடையாது.
கேரளாவில் தந்திரி எடுக்கும் முடிவுகள்தான் இறுதியானவை. ஆந்திராவிலும் அரசு நிர்வாகம், கோயிலின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. தமிழகத்திலும் கோயில் நிர்வாகம் தொடர்பான அனைத்து அதிகாரமும் அறங்காவலர்களின் கையில் தான் உள்ளது. ஆனால் அதை அறநிலையத் துறை தர மறுக்கிறது.
ரூ.2 ஆயிரம் கோடிக்கு டெண்டர்: தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் எந்த அடி அடிப்படை யில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும். அதற்கான உத்தரவு எங்கே என்றும் கேட்டால், தேடிப் பார்க்கிறோம். என்று அறநிலையத்துறையிடமிருந்து பதில்
வருகிறது. 1951 முதல் சட்ட ரீதியாக செல்லாத, காலாவதியாகிப் போன சட்டப் பிரிவுகள் மூலம் 608 செயல் அலுவலர்களைக் கொண்டு, தமிழக கோயில்களை அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் டெண்டர் விட்டு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 31-ஏ (1) (பி) பிரகாரம், எந்த நிறுவனத்தையும் அரசு 3 ஆண்டுகள் வரை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முடியும். தற்போது அறநிலையத்துறை 12 சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாகவும், 4 சதவீதத்தை தணிக்கை கட்டணமாகவும் கோயில் வருவாயில் இருந்து எடுக்கிறது. இது உலகில் எங்குமே இல்லாத ஒன்று. கடந்த 2023 வரையிலான ரூ.1,500 கோடி முறைகேடு தொடர்பான 18 லட்சம் தணிக்கை ஆட்சேபங்கள் இதுவரை தீர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 5.25 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும். அதிலும் 1.04 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை எனவும் கூறுவது அசாதாரணமானது.
இந்த சொத்துகளின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்ட வேண்டிய சூழலில் தற்போது ரூ.100 கோடி மட்டுமே வருவாய் ஈட்டி வருவதாக தணிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ரூ.5,900 அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
திருடு போன சிலைகள்: யானைக்கு நீச்சல் குளம், நினைவு மண்டபம், வணிக வளாகம், கலாச்சார மையம், திருமண மண்டபம், கல்லூரிகள் ஆகிய வற்றை கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப் போகிறோம் என்று அறநிலையத் துறை கூறுகிறது. அனைத்தும் கோயில் பணம். ஆயிரக்கணக்கில் தொன்மையான சிலைகள் திருடுபோய் உள்ளன. அவற்றை இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை.
நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கோயில் பணம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வருமானத்துக்கான டிடிஎஸ் தொகையை வசூலிக்காமல் விட்டதில் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் திறமையின்மை காரணமாகவே இதெல்லாம் நடந்து வருகிறது.
எனவே தான் கோயில் பொறுப்புகளை இறை நம்பிக்கையுள்ள, நேர்மையான, அப்பழுக்கற்ற, அரசியல் தொடர்பு இல்லாத அறங்காவலர்களிடம் ஒப்படையுங்கள் என வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT