

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பைச் சேர்ந்தவர்களின் 9 வீடுகள் சூறையாடப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தர் இளையராஜா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி மகன். அதே ஊரைச் சேர்ந்தவர் செல்வமணி. வேப்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், இளையராஜாவின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் செல்வமணி வசிக்கும் பகுதிக்குச் சென்று, அங்குள்ள 5 வீடுகளில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதேபோல, செல்வமணியின் ஆதரவாளர்களும் இளையராஜா தரப்பினர் வசிக்கும் பகுதிக்குச் சென்று, அங்குள்ள 4 வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடியுள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க திருமாந்துறை கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.