ஒரே ஆண்டில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வருவாய் ரூ.139 கோடி - அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு பாதிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

மதுரை: தமிழக அரசு மருத்துவமனைகளில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டணம் மூலம் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்துக்கு 2019-20 நிதியாண்டில் ரூ.72 கோடி வருவாய் கிடைத்த நிலையில், கடந்த ஒரே நிதியாண்டில் (2023-24) மட்டும் ரூ.139 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற மக்கள் வசதிக்காக கிராமபுற பகுதிகளில் 280-க்கும் மேற்பட்ட அரசு தாலுகா மருத்துவமனைகள், செயல்படுகின்றன. நகரங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துமவனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை தவிர்த்து அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு பொது நலவழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனாலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் நிறுவுவது முதல் அதை செயல்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதை வரை அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் நிர்வகித்து வருகிறது. தமிழத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை 133 எண்ணிக்கையிலான சிடி ஸ்கேன் மற்றும் 42 எண்ணிக்கையிலான எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவியுள்ளது. சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.2500 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இந்த இரு ஸ்கேன் எடுப்பதற்கு கையிலிருந்து தங்கள் சொந்த பணத்தை செலவு செய்யவேண்டும் அல்லது அரசு மருத்துவக்காப்பீட்டு மூலம் கட்டணம் இல்லாமல் பார்க்கவேண்டும். பெரும்பாலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்படுத்துவதில் அதிக நடைமுறை சிக்கல் மற்றும் காலதாமதம் ஆவதால் ஏழை மக்கள் கடன் வாங்கியாவது ஸ்கேன் பார்க்கின்றனர்.

இவ்வாறு மக்களிடமிருந்து பெறப்பட்ட கட்டணத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.511 கோடி ரூபாய் வருவாய் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்கு கிடைத்துள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.72 கோடி வருவாய் கிடைத்தநிலையில் கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.139 கோடியாக அதிகரித்துள்ளதாக மதுரை கே.கே.நகரை சேர்ந்த சுகாதார செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்துக்கு இந்த வருவாயில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதனால், தாராளமாக அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்தவமனைகளிலும் நிறுவலாம். தென் தமிழகத்தில் அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவப்படவில்லை. குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம், காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் புதுகோட்டை மாவட்டம் அரந்தாங்கி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணம் ஆகிய மருத்துவமனைகளில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 7 ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றியுள்ள பேரையூர் உள்ளிட்ட அனைத்து கிராமபகுதி மக்கள் பிரசவம், விஷகாய்ச்சல், சாலை விபத்துக்கள் இன்னும் பிற முக்கிய அவசர முதலுதவி சிகிச்சைக்கு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை பெரிதாக நம்பியுள்ளனர். அவ்வாறு சிகிச்சைக்கு வரும் பலருக்கு கட்டாயம் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு அவசியம் ஏற்படும் நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்படுகிறார்கள் அல்லது தனியார் ஸ்கேன் சென்டர்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதோடு ஆயிரக்கணக்கில் செலவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தனியாரில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் செலவு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் பொருளாதாரம் மற்றும் உடல்ரீதியான சிரமத்துக்கு ஆளாகின்றனர்,” என்றார்.

இது தொடர்பாக வெரோனிகா மேரி அனுப்பிய கோரிக்கை மனுவுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் அளித்த பதிலில், “எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவிட ரூ.6 கோடி வரை செலவாகும். தமிழக அரசிடமிருந்து எவ்வித நிதியும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியில்லாத அரசு மருத்துவமனைகள் உள்ள மாவட்ட தலைமையிடங்களில் உள்ள மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in