Published : 16 Jul 2018 07:47 AM
Last Updated : 16 Jul 2018 07:47 AM

76 ரயில் நிலையங்கள் உட்பட 450 இடங்களில் குழந்தைகள் உதவி மையங்களை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு

நாடுமுழுவதும் 76 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 450 இடங்களில் குழந்தைகள் உதவி மையங்களை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடுமுழுவதும் தற்போது 60 ரயில் நிலையங்கள் உட்பட 435 இடங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தைக் கடத்தல், குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளை போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்துதல் போன்ற புகார்களைத் தெரிவிக்கவும், ரயில், பேருந்து நிலையங்களில் நிற்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை பெற்றுத் தரவும் 1098 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் மூலம் மற்ற அமைப்புகளுடன் இணைந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த உதவி மையங்கள் பல வருடங்களாக செயல்பட்டு வந்தாலும், மக்களிடையே முழு அளவில் விழிப்புணர்வு செய்ய இந்தச் சேவையை விரிவு்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் இந்தத் தகவல் மையத்தைத் தொடர்பு கொண்டு, உதவி தேவைப்படும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களைத் தந்தால், இந்த நெட்வொர்க்கில் உள்ள குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த 2017-18 ஜூன் மாதம் வரையில் குழந்தைகள் உதவி மையங்களில் மொத்தம் 1.4 கோடி அழைப்புகள் வந்துள்ளன. 40 ஆயிரம் குழந்தைகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறுதி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். பெற்றோருக்கும் அறி வுரைகளை வழங்கியுள்ளோம். இதற்கிடையே, நாடுமுழுவதும் 76 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 450 இடங்களில் குழந்தைகள் உதவி மையங்களை அமைக்க இடங்களைத் தேர்வு செய்துள்ளோம். இதற்காக ரயில்வே துறையுடன் இணைந்து தொடர்ந்து ஒப்பந்தம் மேற்கொண்டு பணியாற்றவுள்ளோம்’’ என்றார்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்கும் வகையில் நாங்கள் தன்னார்வத் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். சென்ட்ரல், எழும்பூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் குழந்தைகள் மீட்கும் பாதுகாப்பு கமிட்டியும் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

குழந்தைகைள் நலன் குறித்து மாதந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் குழந்தை உதவி மையங்கள் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகின்றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x