Published : 18 Jan 2025 07:02 PM
Last Updated : 18 Jan 2025 07:02 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கரும், பொதுச் செயலர் வேல்ஆறுமுகமும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் மாநில மற்றும் மாவட்ட பாஜக நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது நிர்வாகிகளை மாற்றி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் மேலிட நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாக பாஜக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவராக தயாசங்கரும், பொதுச் செயலராக வேல் ஆறுமுகமும், தெற்கு மாவட்ட தலைவராக தமிழ்ச்செல்வனும் பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தற்போதைய வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கருக்கு ஆதரவாக பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருந்ததாக தெரிகிறது.
ஆனால், கட்சி தலைமையோ அவருக்கு பதிலாக முத்துபலவேசம், டாக்டர் தீபா, பாலாஜி கிருஷ்ணசாமி ஆகியோரின் பெயர்களை பரிசீலிப்பதாக தெரிகிறது. கட்சி தலைமையின் பரிந்துரையில் தனது பெயர் இல்லாததும், பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு இருந்தும் தன்னை மீண்டும் மாவட்ட தலைவர் பொறுப்புக்கு கட்சி பரிசீலிக்கவில்லை என்பதும் தயாசங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில்தான் கட்சியிலிருந்து விலகுவதாக தயாசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திடீரென்று அறிவிப்பை வெளியிட்டார்.
“இத்துடன் பாஜகவில் எனது அரசியல் பயணம் முடிவடைகிறது. என்னுடன் இதுவரை பயணித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட பொதுச் செயலர் வேல் ஆறுமுகமும், கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அடுத்தடுத்து இரு நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது திருநெல்வேலி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தலைமை மீதான அதிருப்தியில்தான் அவர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள்தான் பாஜகவில் முக்கிய பொறுப்புகளுக்கு வரமுடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் கட்சி வட்டாரத்தில் அதிருப்தி நிலவுகிறது.
இது தொடர்பாக வேல்ஆறுமுகத்திடம் பேசியபோது, “கடந்த 18 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துள்ளேன். அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி பொதுச் செயலர் பதவிக்கு வந்திருந்தேன். ஆனால் தற்போது கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியில் உண்மையாக உழைத்தவர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் என்று மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யாமல், கட்சியில் வேலை செய்யாதவர்களை முக்கிய பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்களை வேட்பு மனுகூட தாக்கல் செய்யக் கூடாது என்று தெரிவித்து ஓரங்கட்டியிருக்கிரார்கள். மேலும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறோம். இதனால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT