திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகள் பலியிட தடை - இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

திருப்பரங்குன்றம் பழனிஆண்டவர் கோயில் முன்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
திருப்பரங்குன்றம் பழனிஆண்டவர் கோயில் முன்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு பலியிடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். அவர்கள் மலை மீது செல்லாதவாறு மலையடிவாரத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழா ஜன.1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.17-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சந்தனக்கூடு வைபவம் நடைபெற்றது. அதனையொட்டி சனிக்கிழமை காலையில் ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கிராம மக்கள், இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை மலை மீதுள்ள பள்ளிவாசலுக்கு கந்தூரி கொடுக்க ஆட்டுடன் ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த காதர் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்பினர் மலை மீது செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மலைமேல் உயிர்ப்பலி கொடுக்க தடை விதிப்பதாக கூறினார். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின்பு இஸ்லாமிய்கள் கலைந்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மலைக்கு மேல் செல்பவர்களை கண்காணிக்க மாநகர காவல் துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன், திருமலைகுமார் ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர்கள் குருசாமி, சூரக்குமார், காட்வின் கேப்ரியேல், சீதாராமன் அடங்கிய 600-க்கும் மேற்பட்ட போலீஸார் மலைக்கு செல்லும் பாதை, பெரிய ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், தர்கா பள்ளிவாசலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமே சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், திருமங்கலம் கோட்டாச்சியர் ராஜகுரு, மதுரை தெற்கு தாசில்தார் ராஜ பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலை பழனி ஆண்டவர் கோயில் அருகே முகாமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in