

உதகை: பந்தலூரில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை டிராக்டரில் அனுப்பியதாக, தேயிலைத்தோட்ட நிர்வாகத்தின் மீது தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள அத்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி. அந்த பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் பல ஆண்டுகளாக கூலித் தொழிலாளியாக பணியாற்றினார். உடல்நலக் குறைவால், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். சுந்தரியின் கணவர் ரவி, அதே தோட்ட நிறுவனத்தில் நிரந்தர கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
நிறுவனம் தரப்பில் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பில் தம்பதி வசித்து வந்தனர். உடல்நலக்குறைவால், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சுந்தரி உயிரிழந்தார். அவரது உடலை, தேயிலை மூட்டைகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் டிராக்டரில் ஏற்றி குடியிருப்புக்கு தோட்ட நிர்வாகம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தோட்டத் தொழிலாளர்கள் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தனியார் மற்றும் அரசு பெருந்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களின் நிலை கொத்தடிமைகளைவிட மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடுக்காட்டில் கட்டப்பட்ட பாழடைந்த குடியிருப்புகள், யானை, புலி, அட்டைக்கடிக்கு மத்தியில் வேலை என கொடுமையான துயரத்தை மட்டுமே எதிர்கொண்டு வருகிறோம்.
காலம் முழுவதும் தேயிலைத் தோட்டங்களில் உழைத்துக் கொடுத்த எங்களுக்கு, இறப்பின்போதுகூட அடிப்படை மரியாதை கிடையாது. இறந்த விலங்கினங்களின் உடலைப்போல, லோடு டிராக்டரில் தொழிலாளரின் உடலை தோட்ட நிர்வாகிகள் அனுப்புகின்றனர். தோட்ட நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் இருந்தும், எங்களுக்காக இயக்குவதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது” என்றனர்.
இது குறித்து கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் கூறும்போது, “இதுதொடர்பாக புகார்கள் வந்துள்ளன. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.