Published : 18 Jan 2025 02:45 PM
Last Updated : 18 Jan 2025 02:45 PM

‘ரூ.1,000 இல்லை... மது விற்பனை ரூ.47 கோடி அதிகரிப்பு’ - தமிழக அரசை ‘டீகோடிங்’ செய்து சாடும் அன்புமணி

விழுப்புரம்: “பொங்கலையொட்டி மூன்று நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடலின் சாதனை” என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டு விற்பனையான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி இல்லை. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்தச் செய்தி காட்டுகிறது.

ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் மருத்துவர் ராமதாஸின் நோக்கம் அதற்காகத் தான் அவர் கடந்த 45 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால், தமிழகத்தை ஆள்பவர்களோ, இங்கு ஒருவர் கூட மது குடிக்காதவர்களாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மது வணிகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம் ரூ.47 கோடி அதிகரித்திருக்கிறது என்பதன் மூலம் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும்தான் திராவிட மாடல் அரசின் சாதனை.

ஒருபுறம் போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது; தீமை என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்கலாமா என்று தொலைக்காட்சி விளம்பரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார். இத்தகைய இரட்டை வேடத்தை மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு எவராலும் நடிக்க முடியாது.

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி இடத்தில் இருக்கின்றன. அந்த மாவட்டங்களை கல்வியில் உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அந்த மாவட்டங்களை மதுவில் மூழ்கடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மூலைக்கு மூலை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழகம் சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையை மாற்ற இங்குள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x