புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடலில் இறங்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடலில் இறங்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் வானிலை மாற்றத்தால் குளிர்ந்த சூழல் நிலவும் நிலையில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தாலும் கடல் சீற்றத்தால் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த சில தினங்களாக இயல்பான சூழல் இருந்தது. இந்நிலையில் இன்று வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.அதிகாலை முதலே வானம் இருண்டு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற சூழல் நிலவுகிறது. வார விடுமுறை நாளான இன்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடற்கரைப் பகுதியில் கடும் நெரிசல் நகரில் நிலவியது.

இச்சூழலில் வானிலை மாற்றத்தால் புதுவையில் கடல் அலைகள் சீற்றம் அதிகமாக இருந்தது. வழக்கத்தை விட காற்றின் இரைச்சலுடன் பெரிய அலைகள் கரையை நோக்கி வந்தது.

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம், காந்தி சிலை, சீகல்ஸ் உணவகம், பழைய துறைமுக பாலம் ஆகிய பகுதிகளில் கடலில் இறங்கி குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடல் அலைகள் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் வார விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் குவிந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், தலைமைச் செயலகம் அருகே செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. அதைதாண்டி இப்பகுதி தொடங்கி பழைய துறைமுகம் வரையிலான மணல் பரப்பும் உருவாகியிருந்தது. அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையால் கடல் நீர் உட்புகுந்து அப்பகுதி மூழ்கியது. எனவே அந்தப் பகுதியில் மக்களின் பாதுகாப்பு கருதி போலீஸார் மற்றும் சுற்றுலா படையினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in