Published : 18 Jan 2025 11:59 AM
Last Updated : 18 Jan 2025 11:59 AM
சென்னை: “இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. அதில் விஜய் குறித்த கேள்விக்கு, “இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்” என அவர் கருத்து தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை பேசியதாவது: விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இண்டியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய கொள்கை, கோட்பாட்டுக்கும் நல்லது. இதை நான் யதார்த்தமாக நாட்டின் ஒரு குடிமகனாகச் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்க்கு அனுமதி.. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இந்த விமான நிலையத்துக்காக பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிதாக கட்சி தொடங்கிய விஜய் தனது முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து பொதுமக்கள், மற்றும் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், போராட்டம் நடத்தும் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக கட்சியின் நிர்வாகிகள் அனுமதி கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதற்காக வரும் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் விஜய் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இந்நிலையில், வரும் 20 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT