Published : 17 Jan 2025 02:08 PM
Last Updated : 17 Jan 2025 02:08 PM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு என்று தனிப்பட்ட வாக்குறுதி எதுவும் அளிக்கப்போவதில்லை என்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இந்த தொகுதியைக் கேட்டுப் பெற்ற திமுக, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், கூட்டணிக் கட்சியினருடன் வந்து தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் எம்பி அந்தியூர் செல்வராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்குப்பின் வி.சி.சந்திரகுமார் கூறியதாவது: பெரியாரின் வழித்தோன்றல்களான திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால், மீண்டும் 2026-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அந்த மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்தி நாங்கள் போட்டியிடுகிறோம். எனவே, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியை இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் 200 சதவீத வெற்றி கிடைக்கும் என பெண்கள் கூறுகிறார்கள். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர். இது வரை 9 வார்டுகளில் மக்களைச் சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நினைத்து, விட்டுச்சென்ற அனைத்து திட்டங்களும், பணிகளும் நிறைவேற்றப்படும்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்று தனிப்பட்ட எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் தமிழர் கட்சி பொய்யும் புரட்டும் பேசி, அரசியல் கட்சிகளில், ஒரு வியாதியாக உள்ளது. அவர்களுக்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. அவர்களோடு போட்டியிடுவது காலத்தின் கொடுமையாகக் கருதுகிறேன். ஈரோட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என இங்கு பிறந்து வளர்ந்த எனக்கு முழுமையாகத் தெரியும். எனவே, எங்கிருந்தோ எழுதிக் கொண்டு வந்து கொடுத்ததை பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT